📅 Monday, 16 November 2026 IST | ஐப்பசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 02, 2026 05:31 PM

'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!'

'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!'

'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!' - துரை வைகோ மதிமுக

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதல்வர் விஜய் நேரில் சென்றிருக்கிறார். முதல்வர் விஜய்யை மதிமுக எம்.பி துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்திருக்கிறது.

இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏ- வாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ, "நாங்கள் இனி தனி இயக்கம். நாங்கள் துரதிஷ்டவசமாக தி.மு.க கூட்டணியில் உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம். உதய சூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் த.வெ.க-விற்கு ஆதரவு தரமுடியவில்லை.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரி போன்ற கட்சிகள் ஆதரவு அளித்திருக்கின்றன. அதில் எவ்விதத் தவறும் இல்லை.

தமிழ்நாடு மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அளிக்காவிட்டாலும் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை 'மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பதற்கு இணங்க நாம் மதிக்க வேண்டும். இந்த அரசு சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கையுடன் அதற்கு ஓராண்டு வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். அரசு ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளோ அல்லது எங்களைப் போன்ற வெளியில் இருக்கும் இயக்கங்களோ தாராளமாகக் கண்டனங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்

திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா என்ற கேள்விக்கு, இது துரை வைகோவோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவோ தனிப்பட்ட முறையில் எடுக்கக்கூடிய முடிவல்ல. ம.தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி.

எனவே, வரும் 27-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட உள்ளது. அந்தப் பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளின் மனநிலை மற்றும் தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த இயக்கத்தின் முடிவாகவே கூட்டணியில் தொடர்வது குறித்த இறுதி முடிவு ஜனநாயக முறைப்படி எடுக்கப்படும்.

ஒரு கட்சியின் கொள்கைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாற்றி வாக்களித்தால் மட்டுமே அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும். கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதால் சட்டப்படி எந்தப் பாதிப்பும் வராது.

மக்கள் பிரதிநிதி தன் கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பிற இயக்கங்களுக்குச் செல்வதோ அல்லது அரசியலை விட்டு ஒதுங்குவதோ அவருடைய தனிப்பட்ட ஜனநாயக உரிமை, அதைத் தடுக்க முடியாது.

சமீபத்தில் டெல்லியில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவரைச் சந்தித்து, திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்குத் தேவையான சுமார் 350 கோடி ரூபாய் நிதியை விரைந்து ஒதுக்குமாறு வலியுறுத்தினேன்.

மத்திய அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் இருப்பதாகக் கருதினர், ஆனால் தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முழுமையாக முடிவடைந்துவிட்டன. நிதி மட்டுமே தற்போதைய தேவை என்பதை அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தினேன். மேலும், இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. ஆண்டுக்கு 16 விழுக்காடு பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது." என்றார்.