📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 18, 2026 10:03 PM

துருவ் ஜூரலின் சர்ச்சை கேட்ச்.. அம்பயரின் முடிவை ஏற்க வேண்டும் என இலங்கை பயிற்சியாளர் பேட்டி

துருவ் ஜூரலின் சர்ச்சை கேட்ச்.. அம்பயரின் முடிவை ஏற்க வேண்டும் என இலங்கை பயிற்சியாளர் பேட்டி

துருவ் ஜூரலின் சர்ச்சை கேட்ச்.. அம்பயரின் முடிவை ஏற்க வேண்டும் என இலங்கை பயிற்சியாளர் பேட்டி

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில், இந்திய வீரர் துருவ் ஜூரல் பிடித்த சர்ச்சை கேட்ச் குறித்து இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரைான் வான் நீகெர்க் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கேட்ச் தவறு சென்று சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக அம்பயர்களின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

காலே மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்தபோது இந்த சர்ச்சை நிகழ்ந்தது. ஆட்டத்தின் 21.4 ஓவரில் மானவ் சுதார் வீசிய பந்தை இலங்கை தொடக்க வீரர் லஹிரு உதாரா எதிர்கொண்டார். அப்போது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஷார்ட் கல்லி திசையில் சென்றபோது, அங்கு நின்றிருந்த துருவ் ஜூரல் தாழ்வாக வந்த பந்தை கேட்ச் பிடித்தார்.

ஆனால், பந்து தரையில் பட்டு கைகளுக்குள் சென்றது போல் வீடியோ பதிவுகளில் காட்சியளித்தது. இதனால் கள அம்பயர்கள் மூன்றாவது அம்பயர் ரவீந்திர விமலஸ்ரீயிடம் முறையிட்டனர். அவர் பல்வேறு கோணங்களில் வீடியோவை ஆராய்ந்து, ஜூரலின் விரல்கள் பந்தின் அடியில் இருந்ததாகக் கூறி அவுட் வழங்கினார். இதனால் 16 ரன்கள் எடுத்திருந்த லஹிரு உதாரா அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

இதுகுறித்து போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை பந்துவீச்சு பயிற்சியாளர் ரைான் வான் நீகெர்க், "நீங்கள் இந்திய அணியின் பக்கமாக இருந்தால் அது விக்கெட் என்பீர்கள். அதுவே இலங்கை அணியின் பக்கமாக இருந்தால் அவுட் இல்லை என்பீர்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அம்பயர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். சாதக, பாதகங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் ஆட்டத்தின் மீதான கவனம் சிதறிவிடும்" என்றார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களும் எடுத்து, இலங்கைக்கு 372 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. இலங்கை வெற்றி பெற இன்னும் 288 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.