📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 17, 2026 06:03 AM

தவெக அமைச்சர்களை அடைமொழியில் அழைத்தால் தான் மக்களுக்கு புரிகிறது: உதயநிதி கிண்டல்

தவெக அமைச்சர்களை அடைமொழியில் அழைத்தால் தான் மக்களுக்கு புரிகிறது: உதயநிதி கிண்டல்

சென்னை: ''தி.மு.க.,வினர் இப் போது 'பெயில்' வாங்குவது போல், த.வெ.க.,வினரையும் 'பெயில்' வாங்க வைக்க வேண்டும்,'' என, தி.மு.க., வழக்கறிஞர் அணி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார்.

தி.மு.க., வழக்கறிஞர் அணியின், வடக்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அமைப்பு செயலர் பாரதி, வழக்கறிஞர் அணி செயலர் இளங்கோ, மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில், உதயநிதி பேசியதாவது: த.வெ.க., அரசுக்கு 'இன்செக்யூரிட்டி' அதிகமாக இருப்பதால், துாங்கி எழுந்ததுமே, யாரை கைது செய்யலாம் என, அட்டவணை போட்டு கைது செய்து வருகிறது.

'காவிரியில் தண்ணீர் வரவில்லை' என கூறியதால், என்னை கைது செய்தனர். அந்த கைது நடவடிக்கையால், சோர்வடைந்திருந்த தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தஞ்சாவூருக்கு ஜாலி 'ட்ரிப்' செல்வது போல் சென்றோம். வழியெங்கும் தொண்டர்கள் திரண்டு, எங்களுக்கும் போலீசாருக்கும், உணவு, ஜூஸ் போன்றவற்றை கொடுத்தனர்.

கைது செய்வதை முன்தினமே கூறி இருந்தால், தஞ்சாவூரிலேயே இருந்திருப்பேன். தேவையின்றி மக்கள் வரிப்பணத்தில், 'ரோடு ஷோ' நடத்தி விட்டனர்.

சீட்டு கட்டில் ஒரு ஜோக்கர் இருக்கும். இங்கு, முழுதும் ஜோக்கராக இருக்கின்றனர். லாட்டரி அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்றவர், திருட்டு வி.சி.டி., விற்றவர், உருட்டுக்கட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர், சங்கி அமைச்சர் என, அடைமொழியில் சொன்னால் தான், மக்களுக்கு புரிகிறது.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆளும்கட்சி நிர்வாகியே வழக்கு தொடர்ந்துள்ளார். மாற்றம் எனக் கூறி கல்லா கட்ட ஆரம்பித்து விட்டனர். இதை, ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வந்து, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரும் வரை, அந்த வழக்கை பின் தொடர வேண்டும்.

கோவையில் போதைப்பொருள் விற்கும் தகவலை தெரிவித்த மாணவரை, போலீசார் காட்டி கொடுத்ததால், அந்த மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.

விரைவில் அனைத்து அமைச்சர்களும் பெரிய வழக்குகளில் சிக்குவர். தி.மு.க.,வினர் இப்போது பெயில் வாங்குவது போல், த.வெ.க.,வினரையும் பெயில் வாங்க வைக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

உதயநிதி பேசுகையில், ''தி.மு.க., வழக்கறிஞர் அணியில், ஒற்றுமை இல்லை என்பது, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் தெரியும். எனவே, வழக்கறிஞர் அணிக்குள் இருக்கும் பிரச்னைகளை சரி செய்து, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய பாடுபட வேண்டும். மக்கள் விரோத த.வெ.க., அரசை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும்,'' என்றார்.