தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் அவசர புகார்: இடைத்தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு!
தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் அவசர புகார்: இடைத்தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு!
மதுரை: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் அவசர புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலூரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அமலன், தமிழக தேர்தல் ஆணையத்திற்கு இந்த மனுவை அளித்துள்ளார். அப்புகாரில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் பகுதிகளில் தவெக தலைவர் விஜய் அவர்களின் இரண்டு நாள் பிரச்சாரத்திற்காக சாலைகளின் இருபுறமும் சேர்த்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிற்கு பேரிக்காடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மிக உயரமான கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருப்பதும், பல்வேறு ஊர்களில் இருந்து லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த செலவு வரம்பை மீறி, பேரிக்காடுகள், தரை, தப்பட்டை மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளுக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் ஆணையத்தின் வீடியோ குழுக்கள் மூலம் இந்த பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்து, இந்த செலவுகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சரியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி அதிகப்படியாக செலவு செய்துள்ள இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் அவசரமாக கோரப்பட்டுள்ளது.