தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான ஊழல் வழக்கில் மீண்டும் விசாரணை
திருவனந்தபுரம்: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 2006ஆம் ஆண்டு கேரள மாநில பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றியபோது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள் குறித்து மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு கேரள மாநிலப் போக்குவரத்து திட்டத்தின்கீழ், ஏறக்குறைய ரூ.215 கோடி மதிப்பிலான எம்.சி. சாலை மேம்பாட்டுப் பணிகளில் ‘பட்டி-பெல்’ (PATI-BEL) என்ற கூட்டமைப்பு ஈடுபட்டிருந்தது. இதில் பணியாற்றிய மலேசிய சிவில் பொறியாளரான லீ சீ பின் என்பவர், அதிகாரிகளின் நெருக்கடி, ஊழல் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.
மேலும், இறப்பதற்குமுன் அவர் எழுதி வைத்திருந்த குறிப்பில், அப்போதைய பொதுப்பணித்துறைச் செயலாளரான ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இச்சம்பவம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட முதற்கட்ட லஞ்ச ஒழிப்பு விசாரணை, அரசியல் அழுத்தங்கள் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டு, கோப்புகள் மூடப்பட்டதாகத் தெரிகிறது.
இதனிடையே, ஞானேஷ் குமார் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். தற்போது காங்கிரஸ் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், நிலுவையில் இருந்த பழைய கோப்புகளை மீட்டெடுத்து விரிவான விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஞானேஷ் குமார் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பு வகித்தபோதிலும், இக்குற்றச்சாட்டு அவர் மாநில ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்திற்குரியது என்பதால், தற்போதைய அரசியல் சாசனப் பதவிக்கான சட்டப் பாதுகாப்பு இந்த விசாரணைக்கு எந்தத் தடையும் விதிக்காது என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடைமுறை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள அரசின் இந்நடவடிக்கை இந்திய அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.