📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 31, 2026 11:00 PM

டி.கே.சிவகுமார்: இந்தியாவின் செல்வந்த முதலமைச்சர்

டி.கே.சிவகுமார்: இந்தியாவின் செல்வந்த முதலமைச்சர்

பெங்களூரு: கர்நாடகாவின் டி.கே.சிவகுமார், இந்தியாவின் ஆகப்பெரிய பணக்கார முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். அவர் அதிகாரபூர்வமாகத் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி (S$189.91 மில்லியன்) ஆகும்.

தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் தொகுத்துள்ள பகுப்பாய்வின்படி, சொத்து மதிப்பில் ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு (ரூ.931 கோடி), தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் (ரூ.648 கோடி) இருவரையும் திரு சிவகுமார் முந்தியுள்ளார். இதன்மூலம், இந்தியாவின் ஆகப்பெரிய பணக்கார மூன்று முதல்வர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2025ல் வெளியிட்ட பட்டியலில், திரு சந்திரபாபுவுக்கு அடுத்தபடியாக அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு (ரூ.332 கோடி), கர்நாடக இடைக்கால முதலமைச்சர் சித்தராமையா இருவரும் இருந்தனர்.

எளிமையான உடைகள் மூலம் தங்களைச் சாதாரண மனிதர்களாகக் காட்டிக்கொள்ள முயலும் பல அரசியல்வாதிகளைப் போலல்லாமல், திரு சிவகுமார் தனது செல்வாக்கை வெளிப்படையாகக் காட்டுபவர். உலகப் புகழ்பெற்ற ஆடம்பர உடைகளையே அவர் அணிகிறார். மேலும், அவரது சட்டைகளிலும் குர்தாக்களிலும் ‘DK’ என்ற அவரது பெயரின் முதலெழுத்துகள் தனித்துவமாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.

திரு சிவகுமாரின் மொத்த சொத்துகளில் ரூ.1,140 கோடி அசையாச் சொத்துகளாகவும் ரூ. 273 கோடி அசையும் சொத்துகளாகவும் உள்ளன. அவருக்கு ரூ.265 கோடி கடன் பொறுப்பு உள்ளது.

தமது சொத்து விவரங்கள் அனைத்தும் தம் பெயரிலும் தம் குடும்பத்தினரின் பெயர்களிலும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரு சிவகுமார் முன்னரே கூறியிருந்தார்.

“மாநிலத்திலும் நாட்டிலும் உள்ள பல அரசியல்வாதிகள் தங்களது சொத்துகளை நிறுவனங்களின் பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால், நான் எனது சொத்து, கடன் விவரங்களை நேர்மையாகப் பிரகடனப்படுத்தியுள்ளேன்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அவரது இந்தச் சொத்துகளில் பெரும்பாலானவை பரம்பரை நிலங்கள், முதலீடுகள், நிலங்களின் மதிப்பு உயர்ந்ததன் மூலம் கிடைத்துள்ளன. தம் தந்தை, பாட்டியின் உயில் மூலம் தமக்குக் கிடைத்த விவசாய நிலங்களையும் திரு சிவகுமார் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு, மைசூரு, கனகபுரா, புதுடெல்லி ஆகிய நகர்களில் உள்ள குடியிருப்புச் சொத்துகளுடன், பெங்களூரு கோபால்புராவில் உள்ள கடைத்தொகுதி நிலமும் இவற்றில் அடங்கும்.