📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 20, 2026 10:33 AM

டில்லியில் பேரணி நடத்த சிஜேபி இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

டில்லியில் பேரணி நடத்த சிஜேபி இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

புதுடில்லி: டில்லியில் நாளை (ஜூலை 20) பார்லியை நோக்கி சிஜேபி இயக்கத்தினர் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், தடையை மீறி பேரணியை நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். உடல்நிலையைக் கருதி நேற்று அவரை வலுக்கட்டாயமாக போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், சிஜேபி எனப்படும் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற அரசியல் நையாண்டி இயக்கத்தின் தலைவர் திப்கே உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று துவக்கியுள்ளார்.

இதனிடையே, நாளை பார்லிமென்ட் கூட உள்ள நிலையில், பார்லியை நோக்கி சிஜேபி இயக்கத்தினர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், பார்லியை நோக்கி பேரணி நடத்துவது தொடர்பாக சிஜேபி இயக்கத்தினர் சார்பில் எந்த அனுமதியும் கோரவில்லை என்றும், பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, டில்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், போராட்டம் நடத்தப்படும் ஜந்தர் மந்தரை தவிர்த்து, வேறு எந்தப் பகுதியிலும் பேரணியோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.