📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 17, 2026 06:04 PM

TN Assembly: "100 நாள் சாதனை என பெருமை பேசும் வேளையில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு.!"

TN Assembly: "100 நாள் சாதனை என பெருமை பேசும் வேளையில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு.!"

TN Assembly: 'முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டும்.!'; அமைச்சர் ரமேஷ் vs நேரு வாதம் | Live

சட்டமன்ற முக்கிய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்.

"முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டும் என்ற கண்ணியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். 8 கோடி தமிழக மக்களின் முதலமைச்சர் வரும்போது மரியாதை கொடுக்க வேண்டும்" என்று தவெக அமைச்சர் ரமேஷ் சட்டமன்றத்தில் பேச திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

அதற்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, " திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்கவில்லை. எழுந்து நிற்கவில்லை என்பது குற்றம், குறையல்ல. அது அவரவர் நடைமுறை. சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

"ரூ.75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தால் 100% தள்ளுபடி செய்யப்படும்"- முதல்வர் விஜய் அறிவிப்பு

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், " தமிழக மக்கள் நம் உயிர் என்றால் தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி. உலகில் சாதி, இனம், மதம், மொழி என அனைத்து தரப்பினருக்கும் அப்பாற்பட்டு செய்யும் ஒரு தொழில் என்றால் அது விவசாயத் தொழில் மட்டுமே. உலகின் ஒவ்வொரு மூலையிலும் உற்பத்தி செய்யப்படும் விவசாயப்பொருட்கள் உலகின் மற்றொரு மூலையில் இருக்கும் மனிதர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது.

தவெக அரசு பல நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றாலும் பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க குறுசிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்தப் பயிர்க் கடனில் 50,000 வரையிலானக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

இதனைத்தொடர்ந்து பயிர் கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. அதன்படி ரூ.1 லட்சம் பயிர்க் கடன் வாங்கியிருந்தால், ஏற்கனவே பெற்ற ரூ.75 ஆயிரம் தள்ளுபடி தொகைக்கு மேலாக 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும், 75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க் கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும்"என்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார்.

"நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.!"; திமுகவினரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்

பேரவையில் கலைஞரின் பெயர் சொல்லிப் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக மன்னிப்பு கோரினார் முதலமைச்சர் விஜய்.

அவையில் 'முன்னாள் முதல்வர்' என்றுதான் குறிப்பிட வேண்டும் என்ற மரபு உள்ளது என சுட்டிக்காட்டி திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், " உங்களின் தலைவர் பெயரை குறிப்பிட்டு எங்கள் அமைச்சர் பேசியது தவறுதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

'முதியவர்களுக்கு ரூ.3000, வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4000 தரோம்னு சொன்னீங்க, ஆனா.!'- கேகேஎஸ் ராமசந்திரன்

சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கேகேஎஸ் ராமசந்திரன்,"தோட்டக்கலை சங்கம் எத்தனை ஆண்டுகாலம் மீட்க முடியாமல் இருந்தது, அதை மீட்டவர் எங்கள் தலைவர்.

சென்னையில் 77,000 பேருக்கு பட்டா வழங்கியவர் ஸ்டாலின். ஓய்வூதியம் நாங்கள் 1200 ரூபாய் கொடுத்தோம். நீங்கள் 3000 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னீர்கள். இந்தப் பட்ஜெட்டில் இதுகுறித்து ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தேன்...

20 ரூபாயில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர், அதனை 1200 ரூபாயாகக் கொண்டுவந்தவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிக்ளுக்கு 3000 ரூபாய் தருகிறோம், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு 4000 ரூபாய் தருகிறோம் என்று சொல்லியவர்கள் நீங்கள்...

இதெல்லாம் இருக்குமா என்று பட்ஜெட்டில் தேடி தேடிப் பார்த்தோம். ஒன்றும் தெரியவில்லை. ஆனால் எங்கள் முதலமைச்சர் எதைச் சொன்னாரோ, அதையெல்லாம் சாதித்து காட்டினார். எங்கள் ஆட்சி தமிழகத்திற்கு மீண்டும் வரும்" என்று பேசினார்.

'எந்த தீமை வந்திருந்தாலும் அது திமுக மூலம்தான் வந்திருக்கும் என எம்ஜிஆர் சொல்லியிருப்பார்.!'- சிடிஆர்

மேகமலை விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "திமுக, அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. புரட்சி தலைவர் எம்ஜிஆர் இதே சட்டமன்றத்தில் 'தமிழகத்திற்கு எந்தவகையில் தீமைகள் வந்திருந்தாலும் அது தீயசக்தி திமுக மூலம் தான் வந்திருக்கும்" என்று சொல்லியிருப்பார்'. அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் மக்களுக்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்டு வருகிறது" என்று பேசியிருக்கிறார்.

திமுக வெளிநடப்பு

கோவை, திருவொற்றியூர் மாணவர்கள் கொலை தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் முறையாக இல்லை எனக் கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

"இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் போதைப்பொருளைப் பவுடராக நுணுக்கி என்ன செய்தார் என்பதை.!"- உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பதை என்பதை அனைத்து கட்சி தலைவர்களும் அரசின் கவனத்திற்கு எடுத்து வந்தோம். ஆனால் இங்கு இருக்கக்கூடிய எந்த அமைச்சரும் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. மாறாக உங்கள் ஆட்சியில் அது நடந்தது, இது நடந்தது என்று குறைச்சொல்லி கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஏன் உங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் போதைப்பொருளைப் பவுடராக நுணுக்கி என்ன செய்தார் என்பதை வீடியோ மூலம் எல்லோரும் பார்த்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் தலைவர் ஸ்டாலின் போதைப்பொருளை ஒழிக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகப்படியானப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டால் இந்த ஆட்சியில் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு. அமல்ராஜ் ஐபிஎஸிடம் கேட்டால் தெரியும்" என்றார்.

"அமைச்சர் ஆதவ் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்"- சபாநாயகர்

ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுக குறித்து பேச ஆரம்பித்தப்போது அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, " எதிர்கட்சியில் 57 பேர் தான் இருக்கிறீர்கள். எதிர்கட்சி தலைவர் பேசும்போது நாங்கள் எழுந்தோம் என்றால்..." என்று கூற சபாநாயகர் பொதுப்பணித்துறை அமைச்சர் கருத்தை ஏற்க முடியாது. நீங்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார்.

" ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது"- உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் இன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், " கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல.

போதைப்பொருள் கும்பல் குறித்து காவல் துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை அரசின் அலட்சியத்தால், போலீஸின் பொறுப்பற்ற போக்கால் தான் நடந்தது. போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. 100 நாள் சாதனை என அரசு பெருமை பேசும் வேளையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடந்து வருவதே சாட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.