TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
’அதிமுகவை மீட்க தான் அமமுக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று முழங்கிய டிடிவி தினகரன், அதற்கான வாய்ப்புகள் கைகூடும் நிலையில் அமைதியாக இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது’
சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே அதிமுக பிளவை நோக்கிச் செல்லத் தொடங்கியது. எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முக உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் அதிமுகவின் முகங்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெக-வில் சென்று இணைந்தனர். இதனால், அதிமுக திக்கு தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் இறங்கிவராத குணத்திற்கு எதிராக அந்த கட்சியில் பல நிர்வாகிகள் வெடித்தெழுந்தனர். இன்னமும் அதிமுகவில் எஞ்சியிருக்கும் முக்கிய நிர்வாகிகள், இங்கேயே தொடரலாமா? அல்லது வேறு கட்சிக்கு செல்லலாமா என்ற மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
அதிமுகவை மாற்ற தலைமையில் மாற்ற வேண்டும்
இப்படியான சூழலில்தான் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால், தலைமை மாற வேண்டும் என்ற எண்ணம் அடிமட்ட அதிமுக தொண்டர்கள் வரை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கு கட்சி மீண்டும் டிடிவி தினகரனின் கைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவை மீட்பதற்காகவே அமமமுகவை தொடங்கியதாக சொல்லியிருந்த டிடிவி தினகரன், அவருக்கான வாய்ப்புகள் தேடி வரும் சூழலில், அமைதியான நிலையில் இருந்து, எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வருவது பலருக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
அதிமுக-வை கைப்பற்றும் படலம் தொடக்கம்
அவர் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாகவும், அதிமுகவுடனே தான் இருப்பதாகவும் கூறினாலும், மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிமுகவும் அமமுகவும் வெவ்வெறு இல்லை இரண்டும் ஒன்றுதான் என்று சமீபத்தில் பேட்டி அளித்திருந்ததும் இதை குறிப்பிட்டுதான்.
ஆனால், அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கு பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இன்னொரு அதிமுக-வாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் டிடிவி தினகரனுக்கு நெருக்கமான டீம் பேசிவருவதாகவும், விரைவில் பெரிய தலைகள் அமமுகவை நோக்கி நகரும் சூழல் வரும் என்றும் தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அமமமுகவை நோக்கி அதிமுக நிர்வாகிகள் செல்லத் தொடங்கிய பின்னரே, அதிமுகவை ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் அவரது திட்டத்தை டிடிவி தினகரன் செயல்படுத்தத் தொடங்கவுள்ளார் என்பது விவரம் அறிந்தவர்களின் தகவலாக இருக்கிறது.
முதலில் குறி வைக்கப்படும் ஏரியாக்கள்
இதற்காக முதலில் டெல்டா மாவட்டம், தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தனித் தனியாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் கூட டிடிவி தினகரனிடம் கட்சி சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்றும், கட்சியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்கும் தேவதூதராக டிடிவி தினகரனே இருப்பார் எனவும் அவர்கள் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான மெனக்கெடல்களும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது. அதனால்தான், அதிமுக அடித்தளமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், அந்த கட்சிக்கு எதிராகவும், பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராகவும் கருத்துச் சொல்லாமல், ஆதரவு நிலைப்பாடு எடுத்து நிதான அரசியல் செய்து வருகிறார் டிடிவி தினகரன்.
சட்டமன்றம் முடிந்த பின்னர் அதிமுகவில் அடுத்த பூகம்பம் எழத் தொடங்கும். அதில், டிடிவி தினகரனின் பங்கு பெரிதாக இருக்கும்
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி