Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
'சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலினிடம் பேசிய பின்னரே செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்’
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலுரை அளித்தார். அதில் அவர் ஆவேசமாக திமுகவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். குறிப்பாக, ஆபாச நதி, வன்ம நதி என்று உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு, பெண்களை பற்றி அவதூறாக பேசும் முன்னர் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்றும் பேசி, சர்க்காரியா கமிஷன் கடந்த கால திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டியும், கடந்த ஆட்சியில் டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறையின் அறிக்கையை எடுத்துக் காட்டியும் முதல்வர் விஜய் பேசினார். அதோடு, திமுக என்றால் அங்கு தவறு இருக்கும், எங்கு தவறு இருக்கிறதோ அங்குதான் திமுகவே இருக்கும் என்றும் அவர் காட்டமாக திமுகவினரை பார்த்து குறிப்பிட்டதுடன், கட்சி நிதி என்ற பெயரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டு பேசினார்.
தர்ணா செய்த திமுகவினர்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் பிரபாகரோ அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. முதல்வர் விஜய் பேசிமுடிக்கும் வரையில் திமுகவினர் எழுந்து நின்று அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், தங்களை பதிலளிக்கவும் முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து பேசவும் அனுமதி கோரி சபாநாயகர் பிரபாகரிடம் அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் முறையிட்டனர். ஆனால், சபாநாயகர் பதிலளிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால், திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வந்து அமர்ந்து தர்ணாயில் ஈடுபட்டனர். அப்போது எழுந்து பேசிய அவை முன்னவரான செங்கோட்டையன், திமுகவினரை அவைக் காவலர்களை வைத்து வெளியேற்ற உத்தரவிடவேண்டும் என்று சபாநாயகரிடம் தெரிவித்தார். இதனையடுத்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்து இப்படி அமளி செய்தால் அவைக் காவலர்களை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் அல்லது நீங்களே வெளியேறிவிடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
திடீரென எழுந்து பேசிய முதல்வர் விஜய்
இந்நிலையில், திடீரென எழுந்து பேசய முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினர் பேச அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சபாநாயகர் அனுமதி தருவதாக முதலில் சொன்னதும் எதிர்க்கட்சியினர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்றனர். ஆனால், திடீரென சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதியை மறுத்தார்.
இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளீட்டோர் வெளிநடப்பு செய்தனர். வெளியில் வந்து உடனடியாக பத்திரிகையாளர்களை சந்திப்பார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மூத்த உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
மு.க.ஸ்டாலினுக்கு சென்ற போன் கால்
அப்போது நேரலையில் அவையின் நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்திருந்தார் என்றும் பிரஸ்மீட்டில் பேசப்போகும் விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் ஆலோசனை சொன்னதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். அதோடு, மிசா சட்டம் பற்றியும் மு.க.ஸ்டாலின் பற்றியும் பேசுவதற்கு முதல்வர் விஜய்க்கு எந்த தகுதியும் இல்லையென்றும் பேசியதும் அந்த போன் காலுக்கு பின்னர்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி