உலக டி20 வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச ரன்.. தமிழ்நாடு பந்துவீச்சை விளாசித் ஜெயதேவ் உனட்கட் சாதனை
உலக டி20 வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச ரன்.. தமிழ்நாடு பந்துவீச்சை விளாசித் ஜெயதேவ் உனட்கட் சாதனை
மும்பை: 2026 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்கு எதிரான போட்டியில், சௌராஷ்டிரா அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் பேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 11வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த பேட்டர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், ஜெயதேவ் உனட்கட் கடைசி பேட்டராக 11வது இடத்தில் களம் இறங்கினார். தமிழக பந்துவீச்சை அடித்து ஆடிய அவர் வெறும் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கடந்த 2020ல் ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் தொடரில் 11வது பேட்டராக இறங்கி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேனி பிரிக்ஸ் அடித்த 35 ரன்கள் உலக சாதனையை ஜெயதேவ் உனட்கட் முறியடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் டொமினிக் டிரேக்ஸ் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா அணி 8.3 ஓவர்களில் வெறும் 92 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான தோல்வியின் விளிம்பில் நின்றது. அப்போது 10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெயதேவ் உனட்கட் மற்றும் சேத்தன் சகாரியா இணை அதிரடி காட்டியது. இருவரும் இணைந்து 49 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 16.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு உயர்த்தினர். சேத்தன் சகாரியா 25 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10வது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கிராண்ட் எலியட் மற்றும் சுல்பிகர் பாபர் ஜோடி சேர்த்த 63 ரன்களே இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, எனினும், கடைசி வரிசையில் களமிறங்கி ஜெயதேவ் உனட்கட் நிகழ்த்திய இந்த அசாத்திய பேட்டிங் கிரிக்கெட் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.