உலகின் சிறந்த பவுலர்களை கூட துவம்சம் செய்கிறார்.. வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி தள்ளிய VVS லட்சுமண்
உலகின் சிறந்த பவுலர்களை கூட துவம்சம் செய்கிறார்.. வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி தள்ளிய VVS லட்சுமண்
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தத் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். அவரது இந்த அசுர வளர்ச்சியை இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இறுதி டி20 போட்டியில், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 81 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். தனது விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ஆட்டம் இந்தத் தொடரில் அமைந்திருந்தது.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய வி.வி.எஸ். லக்ஷ்மண், "ஒரு நபராக வைபவ் சூர்யவன்ஷி வளர்ச்சி அடைந்துள்ள விதம் உண்மையிலேயே வியப்பளிக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் அவரது விளையாட்டு முதிர்ச்சி, புரிதல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை அசுர வேகத்தில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே அவரால் கடினமான சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாள முடிகிறது" என்று புகழாரம் சூட்டினார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக தொடரில் சூர்யவன்ஷி 13, 14 மற்றும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனால் 5-வது மற்றும் இறுதிப் போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தத் தொடரையும் இந்தியா 0-4 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பேசிய லக்ஷ்மண், "அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடினார். அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில், ஐபிஎல் தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். ஐபிஎல் போட்டி எவ்வளவு கடினமானது என்பதை நாம் அறிவோம். இந்திய மற்றும் உலகத்தரம் வாய்ந்த சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னேறிய விதம், அவரது அசாத்திய திறமையையும் தரத்தையும் காட்டுகிறது" என்றார்.
"அவருக்கு இன்னும் 15 வயது மட்டுமே ஆகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் மிகவும் இளையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள அவர் தொடர்ந்து விரும்புகிறார்" என்றும் லக்ஷ்மண் தெரிவித்தார்.