📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 28, 2026 02:33 AM

உலகளாவிய விநியோக நெருக்கடியின் விளைவு ஓரிரு மாதங்களில் தெரியும்: மலேசிய அமைச்சர்

உலகளாவிய விநியோக நெருக்கடியின் விளைவு ஓரிரு மாதங்களில் தெரியும்: மலேசிய அமைச்சர்

அம்பாங்: உலகளாவிய விநியோக நெருக்கடி காரணமாக, வாழ்க்கைச் செலவில் ஏற்படும் தாக்கத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் மலேசியர்கள் உணரத் தொடங்குவர் என்று மலேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

விநியோக இடையூறுகளால் தளவாடங்கள், உரம் மற்றும் தொழில்துறை மூலப்பொருள்களின் விலை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

“ஆய்வுகள், தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உணவு, அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களின் விலை உயரும். இருப்பினும், தொடக்கத்தில் இந்த விலை உயர்வு குறிப்பிடும்படி இருக்காது,” என்று பெர்னாமாவுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (மே 1) தாமான் முடா சந்தைக்கு வருகையளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

விநியோகச் சங்கிலிப் பாதிப்பால் முதலில் தளவாடத் துறை பாதிக்கப்படும்; அதனைத் தொடர்ந்து வேளாண்மை, நெகிழி போன்ற மூலப் பொருள்களைச் சார்ந்திருக்கும் தொழில்களும் பாதிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

உலகளாவிய விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமல்லாமல் அதன் தொடர்பில் உற்பத்திச் செலவு, விநியோகச் செலவு அதிகரிக்கும்.

தற்போது, மூலப்பொருள்களின் விலையில் அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், நெகிழி போன்ற பொருள்களுக்கு விலை உயர்வுக்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் கூறினார்.

போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க உதவும் அரசாங்க எரிபொருள் மானியத்தால் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது எனக் குறிப்பிட்ட திரு சஃப்ருல், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.