"உங்களுக்கு காதும் கேட்கல, கண்ணும் தெரியல ரிட்டையர் ஆகுங்க".. சச்சினுக்காக அம்பயரிடம் எகிறிய சேவாக்
"உங்களுக்கு காதும் கேட்கல, கண்ணும் தெரியல ரிட்டையர் ஆகுங்க".. சச்சினுக்காக அம்பயரிடம் எகிறிய சேவாக்
டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக், சர்ச்சைக்கு பெயர் போன அம்பயரான ஸ்டீவ் பக்னரை "உங்களுக்கு காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை, நீங்கள் ஓய்வு பெற்றுவிடுங்கள்" என்று நேரடியாக முகத்தில் அடித்தாற்போல் பேசிய சம்பவம் குறித்து சக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்த சுற்றுப்பயணத்தில் சச்சின் உள்ளிட்ட பல இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அம்பயர் ஸ்டீவ் பக்னர் தவறான முறையில் அவுட் கொடுத்தார். அது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அவருக்கு எதிராக பிசிசிஐ தனது எதிர்ப்பை பதிவு செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது.
காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, ஜேசன் கில்லெஸ்பி வீசிய பந்தில் சச்சின் டெண்டுல்கருக்கு அம்பயர் ஸ்டீவ் பக்னர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். ஆனால், பந்து ஸ்டம்பிற்கு மிகவும் உயரமாகச் சென்றதை ரீப்ளேவில் அனைவரும் கண்டனர். சச்சின் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பக்னரின் இந்த தவறான முடிவு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "சச்சின் டெண்டுல்கர் எதையாவது சொல்ல விரும்பினால், அதை சேவாக் தான் அம்பயரிடம் கொண்டு சேர்ப்பார். அன்று ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சேவாக், அம்பயர் ஸ்டீவ் பக்னரிடம் சென்று, 'ஸ்டீவ், உங்களுக்கு என்ன வயது ஆகிறது?' என்று கேட்டார். அதற்கு பக்னர், '52 அல்லது 53' என்று பதிலளித்தார். உடனே சேவாக், 'உங்களுக்குக் காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லை. நீங்கள் பேசாமல் ஓய்வு பெற்றுவிடுங்கள்' என்று கூறினார்" என்றார்.
சேவாக்கின் இந்த பேச்சைக் கேட்டுப் பயந்த ஆகாஷ் சோப்ரா, "உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்களுக்கும் அவுட் கொடுத்துவிடுவார்" என்று கூறியுள்ளார். அதற்கு சேவாக், "அவர் எப்படியும் சச்சினுக்கு தவறான முடிவுகளைத் தான் கொடுக்கப்போகிறார். அப்படி இருக்கும் போது என்ன வித்தியாசம் வரப்போகிறது? என் மனதில் உள்ளதையாவது அவரிடம் சொல்லிவிட்டேன்" என்று தில்லாகப் பதிலளித்துள்ளார்.