📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 02, 2026 09:32 AM

உணவங்காடி நிலைய வாடகை ஆதரவை உரிமையாளர்கள் வரவேற்கின்றனர்

உணவங்காடி நிலைய வாடகை ஆதரவை உரிமையாளர்கள் வரவேற்கின்றனர்

மத்திய கிழக்கில் நிலவும் சூழலின் எதிரொலியாகப் பலதுறையினரும் சிக்கலைச் சந்திக்கும் நிலையில், உணவங்காடி நிலையங்களில் கடை நடத்துவோர்க்கு வாடகை ஆதரவு கிடைத்திருப்பது அத்துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

போர்ச்சூழல், அதனைத் தொடர்ந்த விநியோகத் தொடர்ச் சிக்கல் ஆகியவற்றால் உணவுக்கான மூலப்பொருள்கள் தொடங்கி பலவற்றின் விலை உயர்ந்துள்ளதாக விநியோகிப்பாளர்கள் கூறிவருவதைச் சுட்டிய உணவுக் கடை உரிமையாளர் தண்டாயுதம் நீலகிரி, 47, “ஆனாலும் எங்களால் விலையை ஏற்றி விற்க முடியாது. விலையேற்றச் சுமை எங்களைப் பாதிக்கிறது,” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக இத்துறையில் செயல்படும் இவர், தேக்கா நிலையத்தில் ஐந்தாண்டுகளாகக் கடை நடத்தி வருகிறார்.

“எங்களுக்கு தற்போது 3,000 வெள்ளிவரை வாடகைக்காகச் செலவாகிறது. ஒரு கிலோ தக்காளி நாலரை வெள்ளிக்கு விற்கப்படுகிறது. இந்தியச் சமையலில் இன்றியமையாத பொருள்கள் விலையேற்றம் காணும்போது இத்தகைய வாடகை ஆதரவு கைகொடுக்கும்,” என்றார் திரு தண்டாயுதம்.

திறந்து சில வாரங்களிலேயே மூடப்படும் கடைகளைத் தாம் பார்ப்பதாகக் கூறிய அவர், தொடர்ந்து செலவுச் சுமை நீடித்தால் அடுத்த தலைமுறையினர் இத்தொழிலை மேற்கொள்ளத் தயங்குவர் என்றும் உரிய ஆதரவுகள் வழங்கப்படுவது அவசியம் என்றும் சொன்னார்.

மத்திய கிழக்குப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நிலவிய விலையேற்றத்தின் வேகம் தற்போது சற்றே சீரடைந்துள்ளதைச் சுட்டினார் தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையத்தில் கடை நடத்தும் திரு பாண்டியன்.

“எங்கள் பகுதியில் வாடகைச் செலவில் சிரமம் இல்லை. ஆனாலும், வணிகம் மிகவும் குறைந்துள்ளது. அதனை ஈடுகட்ட இந்த ஆதரவு உதவும்,” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக ‘தம்’ பிரியாணி விற்கும் கடை நடத்தி வருகிறார் திரு தமிமுல் அன்சாரி, 45.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“அரசாங்கம் உணவங்காடி நிலையத்தினர்க்கு ஆதரவளிப்பதை வரவேற்கிறேன். இறைச்சி விலையேற்றம் கண்டுள்ளது. பல தரப்பினருக்கும் கவனம் செலுத்த வேண்டியுள்ள முக்கியச் சூழலில் எங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மானியம் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

தேக்கா நிலையத்தில் 15 ஆண்டுகளாக இனிப்பு, பலகாரக் கடை நடத்திவரும் திரு நாகப்பன் கருப்பையா, 52, “ஆறு மாதங்களுக்கு உதவி அறிவித்துள்ளது சிறப்பு. வரும் காலங்களில் நிலைமை சீராகும் என நம்புகிறோம்,” என்றார்.

ஆடம் ரோட்டில் உள்ள பரக்கத் மட்டன் சூப் கடையின் உரிமையாளர் சையது அப்துல் ரஹ்மான், விலையேற்றத்துடன் இரவு நேரத்தில் வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளதால் சிரமத்துக்கு உள்ளாவதைச் சுட்டினார்.

மூலப்பொருள்களின் விலை ஏறினாலும் உணவு வகைகளின் விலையை ஏற்ற முடியாது என்றார் திரு சையது.

ஆறு மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வாடகை ஆதரவை வரவேற்ற அவர், தொடர்ந்து பிற விலைவாசியும் கட்டுப்படுத்தப்பட்டால் உதவியாக இருக்குமென்றும் சொன்னார்.