📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 07:03 PM

உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும் இரட்டை அர்த்தத்தில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-வும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை, விசாரணைக்கு பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தடுக்கத் தவறவிட்டதாக கூறி திமுக சார்பில் நேற்று தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் வந்திருக்க வேண்டும்; ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை; காவிரி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை; திமுக மீது எப்படி பொய்யாக வழக்குப்பதிவு செய்வது குறித்தே அவர் கவனம் செலுத்துகிறார் என்று பேசியதுடன், முதல்வர் விஜய் மற்றும் பெண்களை விமர்சிக்கும் வகையிலும் பேசினார்.

இந்நிலையில், உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சு குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட காவல் துறையிடம் தவெகவின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட அமைப்பாளரான பைரவி புகார் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி மீதி தஞ்சை மாவட்ட காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 196, 192, 352, 79, 296(b), 61, 351(2) பிரிவுகள்; தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் 4வது பிரிவு; தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67வது பிரிவு ஆகியவற்றில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சென்னையில் இருந்த உதயநிதியை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுத்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் முறையிடப்பட்டது.

முறையீட்டை கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவை பிற்பகல் விசாரிப்பதாகவும், அதுவரை கைது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இதற்கிடையில் அவரை கைது செய்த காவல் துறையினர், தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் உதயநிதியின் முன் ஜாமீன் மனு, பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார்.

அப்போது அவர், “எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுவதாகவும், காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து இன்றே விடுவிக்க வேண்டும் எனவும், விசாரணையை நாளை வரை நீட்டிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உதயநிதிக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.