📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 09:03 AM

‘ஊழல் செய்தது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது’

‘ஊழல் செய்தது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது’

‘ஊழல் செய்தது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது’ - கே.என். நேரு வீட்டில் சோதனை குறித்து அமைச்சர் நிர்மல் குமார்

பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு ஆட்களை நியமித்ததாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published : September 7, 2026 at 8:07 AM IST

தேனி: லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை என்பது இயல்பான நடவடிக்கை என்றும், ஊழல் செய்தது யாராக இருந்தாலும் இந்த ஆட்சியில் தப்பிக்க முடியாது எனவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே. மூக்கையாத்தேவரின் 47-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் த.வெ.க சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பி.கே. மூக்கையாத்தேவரின் நினைவு நாளை முன்னிட்டு தானும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதாக அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

லஞ்சஒழிப்புத்துறை சோதனை

தொடர்ந்து, தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை என்பது இயல்பான நடவடிக்கை. இதில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எந்தவிதமான பொய்யான வழக்கையும் போட முடியாது.

பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு ஆட்களை நியமித்ததாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விவகாரம் தொடர்பான வழக்காகத்தான் இது இருக்கும் என நினைக்கிறேன். ஊழல் செய்திருந்தாலோ, தவறு செய்திருந்தாலோ யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்று அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்.

மேகமலை விவகாரம்

தற்போது விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், மக்களின் தற்போதைய உண்மை நிலை குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகள் குறித்து, திமுக நிர்வாகிகளின் காழ்ப்புணர்ச்சியால் பணிகள் முடங்கியதாகவும், தற்போது அந்தப் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டகால கோரிக்கையான 58ஆம் கால்வாய்க்கு நிரந்தர அரசாணை பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கம்யூனிஸ்ட் ஆதரவு

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்துகள் தொடர்பாக, சில நிகழ்வுகள் குறித்து அக்கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தாலும், மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழக மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, மக்களுக்கு என்ன தேவையோ அது தொடர்பாக நாளை நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வில் முதலமைச்சர் பேசுவார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற பி.கே. மூக்கையாத்தேவரின் 47-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய், தங்கப்பாண்டி, கல்லானை, ஜெகநாத் மிஷ்ரா உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டு பி.கே. மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.