📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 03:03 AM

வாக்காளர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வாக்காளர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: எஸ்ஐஆர் பணியின் போது, முரண்பாடுகள் இருப்பதாக நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள் தேர்தல் பதிவு அதிகாரியின் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பல்வேறு முடிவுகளில் தேர்தல் ஆணையர்களிடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, எஸ்ஐஆர் பணியின் போது, முரண்பாடுகள் இருப்பதாக நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள் தேர்தல் பதிவு அதிகாரியின் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை. பூத் நிலை அலுவலரே, சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களைச் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசியம் ஏற்படின் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம், தேர்தல் பதிவு அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில், வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தப்படும். முரண்பாடுள்ள வாக்காளருக்குப் பதிலாக குடும்பத்தில் இருக்கும் யார் வேண்டுமேனாலும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், செய்திகளில் வெளியான தேர்தல் ஆணையர்களின் கடிதம் குறித்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், 'அந்தக் கடிதம் ஆணையத்தின் கொள்கை விவகாரங்கள் தொடர்பானது அல்ல. பணி மாற்றம் பெற்ற ஒரு அதிகாரி தொடர்பான வேலை மறுபகிர்வு உத்தரவுகள், இரண்டு ஆணையர்களின் உத்தரவுக்குப் பின் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், டில்லியில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு அக்டோபர் 30ம் தேதி வரையிலும், மஹாராஷ்டிராவில் அக்டோபர் 12ம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பீஹார், மேற்கு வங்கம் உட்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்கள் பெயர்களைச் சேர்க்க உடனடியாக சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது