Vadhandhi 2: கடைசி வரை திக் திக் ட்விஸ்ட்.. சசிகுமாரின் த்ரில்லர் சீரிஸ்.. மிஸ் பண்ணாமபாருங்க
சென்னை: ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிக்குமார், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், யஷ்வந்த் என பலர் நடித்து இருக்கும் வெப் தொடர் தான் வதந்தி 2. மொத்தம் 8 எபிசோடு கொண்ட இந்த வெப் தொடரில் மூசா ராஜா என்கிற ரோலில் சசிக்குமார் நடித்து இருக்கிறார். எபிசோடுக்கு எபிசோடு ட்விஸ்ட் குறையாமல் பரபரப்பாக செல்லும் இந்த பாடரை இந்த காரணத்திற்காக கட்டாயம் பார்க்கலாம்.
வதந்தி 2 வெப் சிரீஸ்: வதந்தி இரண்டாம் பாகத்தின் முதல் எபிசோடுஆரம்பிக்கும் போதே, ரசிகர்களுக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கதை நகர்கிறது. ஒரு கிராமத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்குவதற்காக மத்திய அமைச்சர் வருகிறார். அதற்கான பணிகள் நடைபெறும் போது, அங்கு ஜேசிபி மூலம் ஒரு குழி தோண்டப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இதனால் உடனடியாக அந்த திட்டம் நிறுத்தப்படுகிறது.
குழியில் எலும்புகூடு: இந்த விவகாரம் மத்திய அரசு - மாநில அரசு பிரச்சனையாக மாறிவிட, இந்த வழக்கை விசாரிப்பதற்காக அதிகாரியாக சசிகுமார், அதாவது மூசா ராஜா, நியமிக்கப்படுகிறார். அந்த எலும்புக்கூடு யாருடையது? யாராவது கொலை செய்து அந்த இடத்தில் புதைத்தார்களா? என்ற கோணத்தில் சசிகுமார் தனது விசாரணையை தொடங்குகிறார். ஆனால், விசாரணை ஆரம்பித்த உடனேயே மிகப்பெரிய சிக்கல் ஒன்று வருகிறது. கிடைத்த எலும்புக்கூட்டில் ஒரு கை எலும்பை காணவில்லை. இதனால் அதே இடத்தில் மீண்டும் தோண்டி பார்க்கிறார்கள். அப்போது ஒரு கை எலும்பு கிடைக்கிறது. ஆனால் இங்குதான் மிகப்பெரிய ட்விஸ்ட். அது ஏற்கனவே கிடைத்த எலும்புக்கூட்டின் கை இல்லை... அது வேறொரு நபருடைய கை என்பது தெரிகிறது.
முடக்கத்தான் மணி: அப்படியென்றால் அந்த இடத்தில் புதைக்கப்பட்டது இரண்டு பேரின் உடல்கள்? என்பதும் இரண்டுமே பெண்ணின் உடல் என்பது தெரிகிறது. விசாரணையை தீவிரப்படுத்தி காணாமல் போன் பெண்கள் குறித்து வந்த வழக்குகளை விசாரிக்கிறார். அப்போது தான், ஜல்லிக்கட்டு வீரரான முடக்கத்தான் மணி, தனது காதலியையும் தங்கையையும் கொலை செய்த வழக்கில் சிறையில் இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து முடக்கத்தான் மணியிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கிடைத்த ஒரு எலும்புக்கூடு முடக்கத்தான் மணியின் தங்கையுடையது என்றும், மற்றொரு எலும்புக்கூடு காணாமல் போன அவரது காதலியுடையது என்றும் உறுதி செய்யப்படுகிறது. இதனால் இரண்டு கொலைகளையும் செய்தது முடக்கத்தான் மணி தான் என்ற முடிவுக்கு வந்து, அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
திக் திக் ட்விஸ்ட்: ஆனால் சசிகுமாருக்கு மட்டும் அந்த கொலைகளை ரவி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்ற சந்தேகம் மனதை உறுத்துகிறது. வழக்கு முடிந்துவிட்டதாக அனைவரும் நினைக்கும் நேரத்தில், சசிகுமார் விசாரணையை வேறு கோணத்தில் கொண்டு சென்று உண்மையான கொலையாளி யார்? அந்த இரண்டு கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மையான மர்மம் என்ன? என ஒவ்வொரு எபிசோடும் ஒரு புதிய ட்விஸ்ட்டுடன் வதந்தி நகர்கிறது. இந்த வார இறுதியில் வீட்டில் ஜாலியாக அமர்ந்து ஒரு நல்ல கிரைம் த்ரில்லர் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வதந்தி நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மறக்காமல் இந்த வெப் சீரிஸை பார்த்து மகிழுங்கள்!