வைபவ் சூர்யவன்ஷி ஏன் நீக்கப்பட்டார் என மனைவி கேட்கிறாங்க.. படம் பார்க்க தொடங்கியாச்சு
வைபவ் சூர்யவன்ஷி ஏன் நீக்கப்பட்டார் என மனைவி கேட்கிறாங்க.. படம் பார்க்க தொடங்கியாச்சு-ஸ்ரீகாந்த்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டதற்கு முன்னாள் இந்தியத் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அவர்களை அடிக்கடி அணியில் இருந்து நீக்கி சேர்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணியின் டி20 தொடரில் தொடர் நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார். அந்தத் தொடரில் 196.10 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 151 ரன்கள் குவித்திருந்தார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் தொடரின் முதல் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அவர் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடியதால், அவருக்குப் போதிய வெள்ளை பந்து பயிற்சி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக மூத்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மாவுடன் களம் இறங்கினார். இப்போட்டியில் சாம்சன் 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக எட்டி வெற்றி பெற்றது.
சூர்யவன்ஷி நீக்கப்பட்டது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "நேற்று சூர்யவன்ஷி விளையாடாததால், நாங்கள் போட்டி பார்ப்பதை நிறுத்திவிட்டு படம் பார்க்கத் தொடங்கிவிட்டோம். கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒருவரை எப்படி அணியில் இருந்து நீக்கலாம் என்று என் மனைவி என்னிடம் வாதிட்டார். என் மனைவியே அவரது நீக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறார். நீங்கள் சூர்யவன்ஷியை சரியாக நடத்தவில்லை. அடுத்த போட்டியில் அவர் விளையாடினாலும், ரன் அடிக்கவில்லை என்றால் மீண்டும் நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்துடனேயே அவர் விளையாட நேரிடும்" என்று சாடினார்.
"இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுடன் விளையாடுகிறது. சாம்சனை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. ஒன்று அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி விட்டு, பின்னர் நீக்குங்கள் அல்லது வைபவ் சூர்யவன்ஷிக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குங்கள். இருவருக்குமே தலா இரண்டு போட்டிகள் வீதம் மாற்றி மாற்றி வழங்குவது இந்திய அணி செய்யும் தவறாகும். இது வீரர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் சஞ்சு சாம்சனைத் தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது சூர்யவன்ஷியை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டுமா என்ற இக்கட்டான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் உள்ளது.