வைபவ் சூர்யவன்ஷி கண்டிப்பாக இதை செய்யனும்.. ராகுல் டிராவிட் தந்த கோல்டன் அட்வைஸ்
வைபவ் சூர்யவன்ஷி கண்டிப்பாக இதை செய்யனும்.. ராகுல் டிராவிட் தந்த கோல்டன் அட்வைஸ்
மும்பை: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி போன்ற திறமையாளர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது சிறந்த விஷயம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. தற்போது, துலீப் டிராபியில் ஈஸ்ட் சோன் அணிக்காக விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரது டெஸ்ட் கிரிக்கெட் திறமை சோதிக்கப்பட உள்ளது.
இருப்பினும், ரஞ்சி கோப்பை பிளேட் லீக்கில் வைபவ் சூர்யவன்ஷியின் புள்ளிவிவரங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன. இந்தியா அண்டர்-19 போட்டிகளில் பங்கேற்றதால் இவரது ரஞ்சி போட்டிகள் தடைபட்டன. இதனால் 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், சராசரியாக 17.25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல் டிராவிட், "நாம் எப்போதும் ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும். வைபவ் ஐபிஎல் மூலம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாடும் அனுபவத்தைப் பெறுவது மிகவும் நல்லது. அதே வேளையில், அவர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அரங்கிற்குத் திரும்பி, சிவப்புப்பந்து போட்டிகளில் விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொள்வதும் அவசியமான ஒன்று," என்று கூறினார்.
"டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றும், அது மென்மேலும் வளர வேண்டும் என்றும் நாம் அனைவரும் விரும்புகிறோம். எனவே, வைபவ் போன்ற வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சாதிக்க வேண்டும்,"
"அவருக்கு இன்னும் கால அவகாசமும், அனுபவமும் தேவை. நிறைய சிவப்புப்பந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கும். அவர் இதுவரை வெள்ளைப்பந்து அளவுக்கு சிவப்புப்பந்து போட்டிகளில் விளையாடியதில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
"அவருக்கு இப்போது 15 வயதுதான் ஆகிறது. எனவே நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர் தனது ஆரம்பக் கட்டத்திலேயே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார், ஆனால் அவரது பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே அனைவரும் அவரிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்," என்று டிராவிட் கூறினார்.