வைபவ் சூர்யவன்ஷி டான் பிராட்மேன் போல் வருவார்.. ராபின் உத்தப்பா கருத்து
வைபவ் சூர்யவன்ஷி டான் பிராட்மேன் போல் வருவார்.. ராபின் உத்தப்பா கருத்து
ஹராரே: ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு, 15 வயதான இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்த தலைமுறையின் தனித்துவமான சாதனையாளராக உருவெடுப்பாரா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான மறைந்த சர் டொனால்ட் பிராட்மேனுடன் அவரை ஒப்பிட்டு உத்தப்பா பேசியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பல்வேறு சாதனைகளை தகர்த்த சூர்யவன்ஷி, சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தார். அதுமட்டுமின்றி, இளையோர் அளவிலான பல்வேறு கிரிக்கெட் போட்டிகளிலும் பல சாதனைகளை அவர் தன்வசமாக்கியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில் 237-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அசுரவேக ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி, அதன் தொடர்ச்சியாகவே இந்திய தேசிய அணியில் இடம்பிடித்தார். ராபின் உத்தப்பவிடம், சூர்யவன்ஷி இந்த யுகத்தின் பிராட்மேனாக மாற வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உத்தப்பா, "இப்போது அதைச் சொல்வது கடினம். வைபவின் பேட்டிங்கிற்கு பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை.
தற்போதைக்கு அவரது பேட்டிங் ஸ்டைலை மட்டுமே அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். எனவே நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிராட்மேன் விளையாடிய காலத்தில், அவரது அதிரடிக்கு முட்டுக்கட்டை போடவே எதிரணிகள் 'பாடி-லைன்' பந்துவீச்சு முறையைக் கையாண்டனர். வைபவின் பேட்டிங் நுட்பமும் பிராட்மேனைப் போன்றே அமைந்துள்ளது. குறிப்பாக வைபவ் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பது மிகக் குறைவு" என்று சுட்டிக்காட்டினார்.
"வைபவ் தனது தற்போதைய ஸ்டிரைக் ரேட்டுடன், 40-களின் பிற்பகுதியில் பேட்டிங் சராசரியை தக்க வைத்துக் கொண்டால், அவர் நிச்சயமாக ஒரு தனித்துவமான வீரராக கருதப்படுவார். அதே சமயம், இரண்டாம் உலகப் போர் நடக்காமல் இருந்து, பிராட்மேன் மேலும் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தால், அவரது சராசரி 99 அல்லது 100-க்கு மேல் இருந்திருக்குமா என்பதைப் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்" என்று உத்தப்பா குறிப்பிட்டார்.
பிராட்மேன் தனது 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களுடன் 99.94 சராசரியுடன் கிட்டத்தட்ட 7000 ரன்கள் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வைபவ் சூர்யவன்ஷி தனது குறுகிய 40 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் வாழ்க்கையில், கிட்டத்தட்ட 43 சராசரியுடனும் 216.32 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டுடனும் விளையாடி உலக அரங்கில் பெரும் கவனம் ஈர்த்துள்ளார்.