📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 07, 2026 01:33 PM

 வேளாண் பட்ஜெட்; விவசாயிகள் கொதிப்பு

 வேளாண் பட்ஜெட்; விவசாயிகள் கொதிப்பு

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன்:

அனைத்து ரேஷன் கடைகளிலும், சத்துணவு மையங்களிலும், பாமாயிலுக்கு மாற்றாக சமையலுக்கு தேங்காய் எண்ணெய் தருவதாக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் தொடரும் குளறுபடி குறித்தும் தெளிவான அறிக்கை இல்லை.

விவசாயிகள் சங்க பொதுச்செயலர் சாமி நடராஜன்: நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலையை மத்திய அரசு வழங்காத நிலையில், மாநில வேளாண் பட்ஜெட்டிலும் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவிக்காதது, பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது, தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யாதது, விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்:

இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில், நம்மாழ்வாரின் புகழை போற்றும் விதமாக, அவரது பெயரில், தஞ்சாவூர் மாவட்டம், சாக்கோட்டையில் உயிர்ம வேளாண்மை பட்டய படிப்பு கல்லுாரி அமைக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம்.

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு:

முதல்வராகி உள்ள விஜய், 'சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் முழுமையாகவும், பெரிய விவசாயிகளின் கடன்கள், 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும்' என, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார்; அதை செய்யவில்லை.

ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன்: ஐந்து ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதம் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், பாண்டியன்: தேர்தல் வாக்குறுதிக்கும், அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிற்கும் சம்பந்தம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆட்சியில் அறிவிக்கபட்ட திட்டங்களுக்கு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன்: தமிழக விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி, பெரம்பலுார் மாவட்டத்துக்கான சின்னமுட்லு அணை கட்டுதல், நாமக்கல் - பெரம்பலுார் உபரிநீர் கால்வாய் திட்டம், டெல்டா மாவட்டங்களுக்கான வறட்சி நிவாரணத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்புகள் இல்லாததால், வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.