வேலுமணி தரப்புக்கு விஜய் கதவை மூடியது ஏன்? மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது எப்படி?
வேலுமணி தரப்புக்கு விஜய் கதவை மூடியது ஏன்? மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது எப்படி?
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா உட்படப் பல மாநிலங்களில் பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இறக்குமதி செய்து, ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியை நிலைநிறுத்துவது என்ற பா.ஜ.க-வின் பாணியை விஜய் கையிலெடுத்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல.
த.வெ.க-வை அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சொன்னார்கள். மேலும், அ.தி.மு.க தொடர்ந்து தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கிறது. தோல்வி குறித்து பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார்.
த.வெ.க ஆட்சியமைக்க வேண்டுமென்றால், 118 எம்.எல்.ஏ-க்களின் பட்டியலைத் தர வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்த நிலையில், மூன்று நான்கு முறை ஆளுநர் மாளிகைக்கு த.வெ.க தலைவர் விஜய் சென்றுவந்தார். அந்த நேரத்தில்தான், தி.மு.க ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி நடைபெற்றது.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டப்படவில்லை… தொடர் தோல்விகள் குறித்து விவாதிக்கப்படவும் இல்லை. தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்தோம் என்றும், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இருந்தால், நிலைமை மோசமாகும் என்று வேலுமணி தரப்பு சொன்னது. மேலும், தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததால், நாங்கள் தனியாக வந்துவிட்டோம் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததில், பிரச்னை ஆரம்பித்ததது. அந்த 25 எம்.எல்.ஏ-க்களையும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி பதவிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்தார். இன்னொரு புறம், சட்டமன்றத்துக்குள் நாங்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்று வேலுமணி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இந்தப் பிரச்னை ஒரு சட்டச் சிக்கலாக மாறியது. வேலுமணியின் மனுவை ஏற்பதா, எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்பதா என்ற குழப்பம் சபாநாயகருக்கு ஏற்பட்டது.
ஆனால், 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசை ஆதரிப்பதில் சட்டச் சிக்கல் எழுந்தது. 25 பேரின் பதவி பறிபோவதற்கான வாய்ப்பு இருந்தது. ஒருவேளை, வேலுமணி தரப்புக்கு ஆதரவாகச் சபாநாயகர் முடிவெடுத்ததால், அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்குச் செல்வார். எனவே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைச் சேர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு த.வெ.க வந்தது.
அ.தி.மு.க-வினரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதில் ஒரு பிரச்னை இருக்கிறது. அதாவது, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டால், ’தூய்மையான ஆட்சி’ என்ற இமேஜ் பாதிக்கப்படும் என்ற அச்சம் த.வெ.க-வுக்கு இருந்தது.
எனவே, இடதுசாரிகள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் உள்ளிட்டோரின் ஆதரவுடன் மட்டும் இப்போதைக்கு ஆட்சியை நடத்தலாம் என்ற முடிவுக்கு த.வெ.க வந்தது. அதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் அணி கரையத் தொடங்கியது. வேலுமணி தரப்பிலிருந்த மரகதம் குமரவேல் உட்பட 4 பேர் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைந்துவிட்டனர். குதிரை பேரம் என்று விமர்சனம் எழத் தொடங்கியது.
இந்த நிலை நீடித்தால் மற்ற எம்.எல்.ஏ-க்களும் த.வெ.க-விடம் சரணடைந்துவிடுவார்கள் என்ற அச்சம் வேலுமணி தரப்புக்கு ஏற்பட்டது. இந்தச் சூழலில், அ.தி.மு.க-வில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான முயற்சி நடைபெற்றது. கடைசியில், வேலுமணி தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் ஆகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கிவிட்டது. இனிமேல், அவர் என்ன முடிவு எடுத்தாலும் வேலுமணி உட்பட அனைவரும் அதைக் கேட்டுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசனை நம்பி கணவனைக் கைவிட்ட கதையாகப் போய்விட்டது. த.வெ.க-வை நம்பி இவர்கள் மோசம் போனார்கள் என்பதுதான் நிஜம்.
அ.தி.மு.க-வைப் பொறுத்தளவில், 12 தோல்விகளைப் பார்த்துவிட்டார்கள். அடுத்ததாக, இடைத்தேர்தல்கள் வரப்போகின்றன. அவற்றிலும் தோல்வியைத்தான் அ.தி.மு.க பார்க்கப்போகிறது. அதுபோக, 2029 மக்களவைத் தேர்தலில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை அ.தி.மு.க எடுக்கப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
‘நாங்கள்தான் புதிய அ.தி.மு.க’ என்ற குரல் த.வெ.க-விலிருந்து வருகிறது. அப்படியென்றால், த.வெ.க-வின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அ.தி.மு.க-வை காலிசெய்துவிட்டு, அந்த இடத்தில் தாங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். ஏற்கெனவே, த.வெ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டியே என்று சொன்னதையும் இதனுடன் பொருத்திப் பார்க்கலாம்.
இரு தரப்பும் ஒன்று சேர்ந்த பிறகு, அ.தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. அதே நேரம், அது செல்வாக்கான கட்சியாக இல்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தற்போது, பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறது. ஆனால், 2029 மக்களவைத் தேர்தலையொட்டி, பா.ஜ.க-வின் நிலைப்பாடு எப்படி மாறும் என்று தெரியவில்லை.