📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 03:30 AM

வெளிச்சப் பாதைக்கு வித்திட்ட நட்சத்திரத் தந்தை

வெளிச்சப் பாதைக்கு வித்திட்ட நட்சத்திரத் தந்தை

ஊடகக் கலைஞர் ரகு ஸ்ரீராம், 19, மேடை அச்சம் இல்லாதவர் என்பதை முதலில் கண்டறிந்தவர் அவரது தந்தையார் திரு ராஜு ரகு, 51.

எவ்விதத் திட்டமிடலும் இன்றித் தொடங்கியது ஸ்ரீராமின் கலைப்பயணம். அவரது தந்தை ஸ்ரீராமின் நிறைகுறைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு ஊக்கமளித்ததில் அது வேரூன்றியது.

சிறுவயதில் ஸ்ரீராம் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க விரும்பாத, எந்நேரமும் திடலில் ஓடியாடும் சுட்டிப் பையனாக இருந்தார்.

அறிமுகமில்லாத புதியவர்களிடம்கூட எவ்விதத் தயக்கமுமின்றித் தானாகச் சென்று பேசும் அவரது வெளிப்படையான குணத்தைத் திரு ராஜு கவனித்தார்.

தமிழ்வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்த அவருக்கு, ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் பேசும் மகனின் பாணியைப் புரிந்துகொண்டு வழிநடத்துவது ஒரு புதிய சவாலாகவே அமைந்தது.

எனினும், இந்தச் சிந்தனை வேறுபாடுகளுக்கு இடையே இருவரையும் இணைக்கும் சுமுகமான பாலமாக இசை உருவெடுத்தது.

ஸ்ரீராம் பழைய தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடத் தொடங்கியதும் கிடைத்த பாராட்டுகள், திரு ரகுவுக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தன. அந்த நம்பிக்கையில் ஏழு வயதில் ஸ்ரீராமை மேடையேற்றினார்.

தோல்விகளில் தொடங்கிய வெற்றி

ஊடக உலகம் தொடக்கத்திலேயே ஸ்ரீராமுக்கு வெற்றிச் சுவையைப் பரிசளிக்கவில்லை. தொடக்க காலத்தில் மேடைகளில் தோற்று, தன் நண்பர்கள் வென்ற தருணங்களில் ஸ்ரீராம் வீடு திரும்பியபின் அழுது அடம்பிடிப்பது வழக்கம் என்று திரு ரகு நினைவுகூர்ந்தார்.

ஆனால் அதை ஒரு தொல்லையாகக் கருதாமல், உலகமறியாப் பிஞ்சு மகனுக்குள் ஒளிந்திருந்த வெற்றித் தாகத்தை அந்தத் தந்தை உணர்ந்தார்.

தோல்வி தந்த ஏமாற்றங்களை வெற்றி பெறுவதற்கான நேர்மறைச் சிந்தனைகளாக மாற்றி, மகனுக்கு அவர் பக்கபலமாக நின்றார்.

மெல்ல மெல்ல மேடைகளில் வெற்றி கிட்டிய அதே வேளையில், வெளியிலிருந்து கடுமையான பொது விமர்சனங்களும் எழவே செய்தன. தம் மகனின் தன்னம்பிக்கை எவ்விதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த தந்தை, எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்த்தார். “கூட்டத்தில் இருந்தவர் உன்னைப் பாராட்டினார், இவர் உனது பாடலை ரசித்தார்,” என ஊக்கமளிக்கும் கருத்துகளையே ஸ்ரீராமிடம் அவர் விதைத்தார்.

வளரும் பருவத்தில் கலைத்திறன்களை வளர்ப்பதோடு, அவரது குழந்தைத்தனம் தொலைந்துவிடாமல் ஓடியாடி விளையாடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த திரு ரகு, ஐந்து நிமிடப் பாடலுக்கு முப்பது நிமிட விளையாட்டு என்ற சமநிலையை ஸ்ரீராமுக்கு உருவாக்கினார்.

மேடைக்கு அழைக்கும் வரை விளையாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீராம், பாடி முடித்த அடுத்த கணமே மீண்டும் விளையாட ஓடிவிடுவார் என்று அவர் விவரித்தார்.

திரைக்குப்பின் எதிர்கொண்ட சவால்கள்

நேர்முகத் தேர்வுகளில் (auditions) மற்ற குழந்தைகள் கேமராவைக் கண்டு அஞ்சி ஆறுதலுக்காகப் பெற்றோரைத் தேடியபோது, ஸ்ரீராம் எவ்விதப் பயமுமின்றி கேமராவை நேராகப் பார்த்துப் பாடினார். அந்தத் தனித்துவமே அவருக்கு மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழியின் ‘ஓகே கண்மணி’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மேடையேறும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

ஆனால், திரைக்குப் பின்னால் இருந்த சவால்கள் வேறு வடிவில் இருந்தன. நிர்வாகச் சிக்கல்களைக் கையாள்வது திரு ரகுவிற்குச் சவாலாக அமைந்தது.

ஒரே நாளில் வெவ்வேறு படப்பிடிப்புகள், தனிப்பட்ட ஒப்பந்தங்கள், கால்ஷீட் முரண்பாடுகள் எனப் பல நிர்வாகச் சிக்கல்களை தந்தை முன்னின்று கவனித்தார். தந்தையார் தனக்காக எதிர்கொண்ட இத்தகைய சிரமங்களை ஸ்ரீராம் உயர்நிலை மூன்றாம் ஆண்டு படித்தபோதுதான் முழுமையாக உணர்ந்தார்.

“ஆரம்பத்தில் அப்பா என்னை வற்புறுத்துகிறார் என்றுதான் நினைத்தேன். மற்ற நண்பர்கள் வெளியே சுற்றும்போது, எனக்கு மட்டும் படப்பிடிப்பு இருக்கிறதே என்ற தனிமை உணர்வு வாட்டியது,” என்று ஸ்ரீராம் கூறினார்.

எனினும், போவன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுகொண்டே ‘அயலான்’ போன்ற உள்ளூர் நாடகங்கள், கல்வி அமைச்சுக்கான பின்னணிக் குரல் பணிகளில் ஸ்ரீராம் ஈடுபட்டபோது, திரு ரகு அவருக்குத் தூணாகத் துணைநின்றார்.

பெற்றோர் தன்மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையே ஊடகத் துறையில் தனது வளர்ச்சிக்கு முதன்மைக் காரணம் என ஸ்ரீராம் நன்றியோடு குறிப்பிட்டார்.

எதார்த்தமான அணுகுமுறையும் மனநிறைவும்

வெளியுலகம் மேடை வெற்றிகளை மட்டுமே கொண்டாடுகிறது.

ஆனால், விளையாட்டு நேரத்தை இழந்து சிறுவயதில் ஸ்ரீராம் பொறுமையிழந்து கோபப்பட்டதைப் பெற்றோர் மட்டுமே அறிந்திருந்தனர். அறியாப் பருவத்தின் இயல்பு அது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் தொடர்ந்து ஆதரவளித்தனர்.

வெற்றிகள் குவியும்போது ஸ்ரீராமுக்குத் தலைக்கனம் வந்துவிடக்கூடாது என்பதில் திரு ரகு தெளிவாக இருந்தார்.

“கடவுள் நமக்கு ஒன்றைக் கொடுத்தால், இரண்டைப் பறிக்கவும் செய்வார்,” என்ற வாழ்வியல் எதார்த்தத்தை மகனுக்குக் கற்பித்தார்.

இன்று ஸ்ரீராம் ஊடகப் பணிகளைச் சற்று குறைத்துக்கொண்டு, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.

“அவரது சாதனைகள் எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கின்றன,” என்று கூறிய திரு ரகுவின் வார்த்தைகளில் மகன் தந்தைக்காற்றிய உதவியை உணர்ந்த நெகிழ்ச்சி வெளிப்பட்டது.