'வெற்றி' திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட விஜய்.. இதுக்குதான் ஆலோசனையா.. சாடிய உதயநிதி!
'வெற்றி' திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்ட விஜய்.. இதுக்குதான் ஆலோசனையா.. சாடிய உதயநிதி!
சென்னை: திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு தவெக அரசு பட்ஜெட் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தவெக ஆட்சியில் விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவை கண்டிக்க வக்கில்லாத தவெக அரசு என்றும் சாடியுள்ளார்.
தவெக ஆட்சி அமைத்து தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் மரிய வில்சன் 151 நிமிடங்கள் இந்த பட்ஜெட் உரையை வாசித்து முடித்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட 100 நாட்களாகிவிட்டது. இந்த 100 நாட்களில் இந்த அரசுக்கான மார்ஜ் என்னவென்றால், பூஜ்ஜியம் என்பார்கள்.
இந்த பட்ஜெட்டும் மிகப்பெரிய ஜீரோ தான். தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது. ஆனால் எப்போது செயல்படுத்துவீர்கள் என்ற அட்டவணையை வெளியிடுங்கள் என்று கேட்டு கொண்டே இருந்தோம். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வரும் போது மாற்றம் மாற்றம் என்றார்கள்.
என்ன மாற்றம் என்றால், பெயர் மாற்றம் செய்துள்ளார்கள். அனைத்து திட்டங்களின் பெயரையும் மாற்றியுள்ளார்கள். வழக்கமாக பட்ஜெட்டுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அதுபோல் முதல்வர் விஜய்யும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது போல் புகைப்படம் எல்லாம் வந்தது. பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்கு ஆய்வுக் கூட்டம் என்பது தான் தெரியவில்லை.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை மட்டும் அறிவித்துள்ளார். அதையும் கூட தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என்று கூறி இருந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் மோதிரம் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை போல் எந்த அறிவிப்பும் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது என்று நிதியமைச்சர் கூறினார். திமுகவின் சாதனைகளை இந்த பட்ஜெட்டில் ஒத்து கொண்டதற்கு நன்றி.. அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், அம்பேத்கர் அயலக கல்வி திட்டம், அயோத்திதாசர் வாழ்விட மேம்பாடு திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.
இந்த திட்டங்களுக்கு முன் 'வெற்றி' என்று பெயரை போட்டு கொண்டுள்ளார்கள். அன்புச்சோலை என்று நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் என்று மாற்றியுள்ளனர். லேப்டாப் திட்டத்தின் பெயரை வெற்றி மடிக்கணினி என்றும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை வெற்றி வீடு திட்டம் என்றும், மாடல் பள்ளிகளை தகைசால் பள்ளிகள் என்றும், நன்னிலம் திட்டத்தை மண்ணின் மகள் திட்டம் என்று மாற்றியுள்ளனர்.
கல்வித்துறைக்கான கல்வி ஒதுக்கீடு குறைந்துள்ளது. மேகதாது விவகாரத்தை கர்நாடகாவை கண்டிக்க வக்கில்லாத ஒரு அரசாக தவெக உள்ளது. வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்க்கடன் தள்ளுப்படியை முழுமையாக செய்யவில்லை.
திமுக எம்எல்ஏ-க்களை தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். அதிமுக எம்எல்ஏ-க்களை வாங்கி கொண்டிருக்கிறார்கள். ஜென் ஸி திமுகவை கைது செய்து வருகிறார்கள். 100 நாட்களாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள், முதியோருக்கு பாதுகாப்பு இல்லை. 5 வாரங்கள் 4 லாக் அப் டெத், 5 சாதிய ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.
விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. அரிசி விலை உயர்ந்திருக்கிறது. இதனை கேட்டால் முதல்வர் பதில் சொல்ல மாட்டார். முதல்வரை கேள்வி கேட்டால், அவருக்கு பதிலாக பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று ஜாமின் வாங்குகிறார்கள். இதற்கு அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாம்.. அமைச்சர்களே பதில் சொல்வார்களாம்.. இதற்கு ஏன் முதல்வர் அவைக்கு வர வேண்டும்.. நாங்கள் எல்லாம் அவைக்கு ஏன் வர வேண்டும். மகளிர் உதவித்தொகை குறித்தெல்லாம் பேசவே இல்லை.. ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.