வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் மோதல்.. பயிற்சியாளர் டேரன் சமியை வெளுத்து கட்டிய ஸ்டார் பவுலர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் மோதல்.. பயிற்சியாளர் டேரன் சமியை வெளுத்து கட்டிய ஸ்டார் பவுலர்
பார்படாஸ்: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் விளையாடாதது குறித்து, தலைமைப் பயிற்சியாளர் டேரன் சேமி வெளியிட்ட கருத்துகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் விளக்கமளித்துள்ளார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான அணியை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அறிவித்தபோது, தனிப்பட்ட காரணங்களால் அல்சாரி ஜோசப் இப்போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று வாரியம் தெரிவித்தது.
இருப்பினும், ஜோசப் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போதிலும், விளையாடுவதற்கான அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகப் பயிற்சியாளர் டேரன் சேமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜோசப் தேர்வை நிராகரித்துவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பேசிய அல்சாரி ஜோசப்,."நானும் தலைமைப் பயிற்சியாளரும் பேசினோம். நான் CWI அமைப்பிடமும் பேசினேன். வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தனிப்பட்ட காரணங்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். திரு. சேமி நீண்ட காலமாக கிரிக்கெட் வட்டாரத்தில் இருப்பவர். அவரது அறிக்கை வெளியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே, அவரது அறிக்கை குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை," என்று ஜோசப் கூறினார்.
"நான் ஏற்கனவே கூறியது போல, அவரது வார்த்தைகள் பொதுவெளியில் என்ன மாதிரியான பிம்பத்தை உருவாக்கும் என்பது அவருக்குத் தெரியும். நான் கடந்த ஒரு வருடமாக விளையாடாமல் இருந்தேன். இரண்டாவது முறையாக எனக்கு ஏற்பட்ட முதுகு எலும்பு முறிவு காரணமாக, நீண்ட நாட்களாக சர்வதேச அளவிலான தீவிரமான போட்டிகளில் நான் விளையாடவில்லை," என்று ஜோசப் தெரிவித்தார்.
"இங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது, அதற்கு முன்பு இந்த மாத தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது, மற்றும் எனது உடலின் தற்போதைய நிலை குறித்து நாங்கள் பேசினோம். மற்றொரு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு எனது உடல் இன்னும் தயாராகவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனவே, சரியான பின்னணி இல்லாமல் வெளியான அந்த அறிக்கை தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
"நான் ஒரு தொழில்முறை ஆட்டக்காரர், எனவே எனது பணியைச் செய்ய நான் மைதானத்திற்குச் செல்வேன். நான் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்காக விளையாடுகிறேன். நான் டேரன் சமிக்காக விளையாடவில்லை. எனவே, எங்கள் உறவு குறித்த பேச்சுகள் எனக்கு முக்கியமில்லை. நான் அங்கு நண்பர்களை உருவாக்கச் செல்லவில்லை. எனது பணியைச் சிறப்பாகச் செய்து, வெஸ்ட் இண்டீஸ் நாட்டு மக்களுக்காக மட்டுமே அங்கு விளையாட செல்கிறேன்," என்று அவர் கூறினார்.