வீரமணி மீதான பா*யல் வன்கொடுமை வழக்கு: ரஞ்சன் குமார், சாந்தி மீது ஜான் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!
வீரமணி மீதான பா*யல் வன்கொடுமை வழக்கு: ரஞ்சன் குமார், சாந்தி மீது ஜான் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தியும், காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமாரும், வீரமணியிடம் இருந்து ரூ.20 கோடி வாங்கித் தருமாறு தன்னிடம் பேசியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னை மிரட்டியதாகக் கூறி புகார் அளிக்க வேண்டிய நிலையில், சுமார் இரண்டரை ஆண்டுகளாக சாந்தியும் ரஞ்சன் குமாரும் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஜான் பாண்டியன் அளித்த விளக்கத்தில் கூறியதாவது “நான் மிரட்டியதாகக் கூறுகிறார்கள். நான் மிரட்டினேன் என்றால் என்னிடம் ஏன் வர வேண்டும்? காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியதுதானே? என்னை சந்திக்க அவர்கள் எதற்காக வந்தார்கள்?
ஒரு அரசியல் பிரமுகர் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ரஞ்சன் குமார் உங்களை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அரசியல் பிரமுகரின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அவர் கொஞ்சம் நல்லவர். அதனால், ‘வரச் சொல்லுங்கள்’ என்று கூறினேன். குடும்பப் பிரச்னை தொடர்பாகப் பேசி முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அரசியல் தலைவர்கள் என்றால் இதுபோன்ற பிரச்னைகளுக்காக சந்திக்க வருவது வழக்கம்தானே என்று நினைத்து, ‘சரி, பேசலாம்’ என்று கூறினேன்.
அதன்பிறகு தாஜ் ஹோட்டலுக்கு வருமாறு ரஞ்சன் குமார் கூறினார். சாந்தியை ரஞ்சன் குமார்தான் அழைத்து வந்தார். அவர்கள் இருவரையும் நான் சந்தித்தது அதுதான் முதல் முறை.
சந்தித்தவுடன், ‘வீரமணி என்பவர் இந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்’ என்று அவர்கள் தெரிவித்தனர். அதற்கு நான், ‘இதில் நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டேன். அப்போது, ‘எப்படியாவது அவரிடம் இருந்து ரூ.20 கோடி வாங்கிக் கொடுங்கள். அவர் பெரிய கோடீஸ்வரர்’ என்று சாந்தியும் ரஞ்சன் குமாரும் என்னிடம் கேட்டனர்.
அதற்கு நான், ‘இந்த மாதிரியான வேலைகளை நான் செய்வதில்லை. இப்போது ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கிறேன். தேவையில்லாமல் எந்த சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அதன்பிறகு அவர்களுடன் எனக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
இப்போது இந்தப் புகாரில் ஏன் என் பெயரைக் கொண்டு வருகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. ரஞ்சன் குமார் காவல்துறையில் நான் புகார் அளித்ததாகக் கூறி சில ஆவணங்களைக் காட்டி, என்னை இதில் சிக்க வைக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது.
அவர்கள் இருவரும் அப்போதே ஊடகங்களை அணுகியிருக்கலாமே? அப்போது ஏன் எதுவும் செய்யவில்லை? சுமார் இரண்டரை ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது இந்தப் பிரச்னையில் என் பெயரைக் கொண்டு வருவது ஏன் என்று நான் கேட்கிறேன்.” இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.