விஜய்... இங்கே வராதீங்க!: சொல்கிறார் கர்நாடக முதல்வர்
பெங்களூரு: ''தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவால், போராட்டங்கள் நடக்கும் சூழலில், தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம்,'' என, முதல்வர் விஜய்க்கு, கர்நாடக முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், காவிரி நீர் பிரச்னை தொடர்பான பேச்சில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, காவிரியில் தமிழகத்திற்கு தினமும், 3,500 கன அடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உத்தரவிட்டன.
இந்த உத்தரவுக்கு எதிராக மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் உயர் அதிகா ரிகள், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
கடலில் கலப்பு
கடந்த மூன்று ஆண்டுகளாக மழைப்பொழிவு திருப்திகரமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது; தமிழகத்திற்கு 400 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில், பெரு மளவு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முன், கர்நாடகாவில் இருந்து பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர்களாக இருப்போர், எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
மேல்முறையீட்டு மனுவை மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா ஆகியோருக்கும் அனுப்பினோம். அவர்களும், தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.
தங்களுக்கு 9.94 டி.எம்.சி., தண்ணீர் திறக்கும்படி தமிழகம் கேட்டது. ஆனால், 4 டி.எம்.சி., திறக்க, நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. தண்ணீர் திறப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பால் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க, விதான் சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடக்கிறது. மாநிலத்தின் நலனுக்காக எதிர்க்கட்சியினர், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனைகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவு எடுப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு, 0.6 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடுவோம்; இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குறைவாகவே திறந்து விட்டுள்ளோம். இது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு.
வரும் 13ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு, கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. நாங்கள் விவசாயிகள் பக்கம் தான் உள்ளோம். அதனால், முழு அடைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அது, எந்த தீர்வையும் அளிக்காது. முழு அடைப்பு வேண்டாம் என, அரசு சார்பில் பணிவுடன் கேட்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் பற்றி விவாதிக்க, தமிழகத்திற்கு வருவதாக நான் கூறினேன். அவர்கள் எனக்கு அனுமதி கொடுக்கவில்லை.
தற்போதைய தமிழக முதல்வர் விஜய், தன் குழுவுடன் பெங்களூரு வருவதாக கூறினார்; அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை நன்றாக இல்லை. சந்திப்பை சில நாட்களுக்கு ஒத்திவைக்கும்படி, விஜயிடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். தண்ணீர் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடப்பது, எங்களுக்கு நிம்மதியை தரவில்லை.
நாங்கள் தமிழக முதல்வரை சுமுகமாகவும், மரியாதையுடனும் உபசரிக்க வேண்டும். அதனால், வரும் 3ம் தேதிக்கு பதிலாக, இன்னொரு தேதியை நிர்ணயிக்கும்படி அவருக்கு கோரிக்கை வைப்பேன்.
தமிழக நலனை பாதுகாக்க விஜய் விரும்பினால், கர்நாடகா நலனை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம்.
மேகதாது அணை திட்டத்தால், கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன் அடையும். அணை தண்ணீரை மின் உற்பத்தி, குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.
'கர்நாடகாவின் நிலத்தில் அணை கட்ட அவர்களுக்கு உரிமை உண்டு' என்று மத்திய அரசும் கூறியுள்ளது. அணை திட்டத்திற்காக நாங்கள் அனுப்பிய விரிவான திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிராகரிக்கவில்லை; கூடுதல் தகவல் கேட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் சிவகுமார் கூறினார்.
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, வரும் 3ம் தேதி, இரு மாநில முதல்வர்கள் இடையே நடக்கும் பேச்சில் சுமுக தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
'காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது' என வலியுறுத்தி, கே.ஆர்.எஸ்., அணை முன் நேற்று பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடந்த போராட்டத்தில், பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்., மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்; திடீரென அணைக்குள் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்து பஸ், வேன்களில் அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், ''எந்த காரணத்திற்கும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது. இதை வலியுறுத்தி, வரும் 13ம் தேதி காலை 6:00 முதல் மாலை 6:00 வரை கர்நாடகாவில் முழு அடைப்பு நடக்கும். இதற்கு ஆதரவு தரும்படி அனைவரிடமும் கைகூப்பி கேட்கிறேன்,'' என்றார். இந்த முழு அடைப்புக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.