📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 14, 2026 11:00 PM

'விஜய் மாமா... மதுக்கடையை மூடுங்க': குழந்தைகள் உருக்கமான வேண்டுகோள்

'விஜய் மாமா... மதுக்கடையை மூடுங்க': குழந்தைகள் உருக்கமான வேண்டுகோள்

பல்லடம்:''முதல்வர் விஜய் மாமா... டாஸ்மாக் கடையை மூடுங்க'' என்று மதுக்கடையை மூட வலியுறுத்திய பெண்களுடன் வந்த குழந்தைகள் முறையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நேற்று அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். பள்ளி, கோவில், ரேஷன் கடை மற்றும் குடியிருப்புகள் அருகே இயங்கும் மதுக்கடையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக பெண்கள் குற்றம்சாட்டினர். மது அருந்திவிட்டு ஆண்கள் வீட்டில் தகராறு செய்வதும், குடும்ப வருமானம் மதுவுக்கு செலவாவதும், சாலைகளில் மது பாட்டில்கள் வீசப்படுவதும் தொடர்வதாக தெரிவித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள், “விஜய் மாமா... டாஸ்மாக் கடையை மூடுங்கள். அப்பா எப்போதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். எங்களுக்கு நோட்டு, பென்சில் கூட வாங்கித் தருவதில்லை,” என முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளிடம் 'விஜய் மாமாவுக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள்' என முதல்வர் விஜய் பேசியது வைரலான நிலையில், அதே பாணியில் குழந்தைகள் கோரிக்கை வைத்தது கவனம் பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

துாக்கில் தொங்குவேன் கலாய்த்த 'குடி'மகன் போராட்டம் நடந்தபோது, அங்கு வந்த குடிமகன் ஒருவர், “பெண்களுக்கு இலவச பஸ், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு என்ன செய்தார்கள்? டாஸ்மாக் மூடினால் நான் துாக்கில் தொங்கிவிடுவேன்,” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்றொரு குடிமகன், போராட்டத்தில் கலந்து கொண்ட தனது மனைவியிடம், “டாஸ்மாக் மூடினால் நீயும் வீட்டுக்கு வர வேண்டாம்” என கூறியதும் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் பெண்கள் மதுக்கடை அகற்றக் கோரி போராட, மறுபுறம் மதுக்கடை வேண்டும் என 'குடி'மகன்கள் வலியுறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ----- போராட்டத்தின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட 'குடி'மகன்கள்.