📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 05:04 PM

விஜய்யின் கூலிங்கிளாசும் கருகும் சம்பாவும்: டெல்டாவை நடுத்தெருவில் வீசிய 45 நாள் நாடகம்!

விஜய்யின் கூலிங்கிளாசும் கருகும் சம்பாவும்: டெல்டாவை நடுத்தெருவில் வீசிய 45 நாள் நாடகம்!

செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஒருபுறம் முதலமைச்சர் விஜய்யின் வருகை, ஆரவாரம், புகைப்படம் என அரசியல் நாடகங்கள் விமரிசையாக அரங்கேறின. தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் காவிரியின் கடைமடையிலோ, இருபது நாட்களுக்கு மேல் தண்ணீர் கிடைக்காமல் வயல்களில் விதைகள் காய்ந்து கிடக்கின்றன. குறுவையை இழந்து, கடன் வாங்கி சம்பாவையாவது காப்பாற்றலாம் என வயலில் இறங்கிய விவசாயிகள், இன்று கடனோடும் காய்ந்த வயலோடும் வடகிழக்குப் பருவமழைக்காக வானத்தைப் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அப்படியானால் அரசே அறிவித்த இந்த 45 நாள் மேட்டூர் நீர்த்திறப்பு எதற்காக? வசாயிகளின் பயிரைக் காப்பாற்றுவதற்கா? அல்லது “மேட்டூர் அணையைத் திறந்துவிட்டோம்” என்று ஓர் அரசியல் நாடகம் நடத்தவா?

குறுவை காலி; சம்பாவும் காலியா?

வழக்கமாகத் திறக்க வேண்டிய ஜூன் 12-இல் மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. அதன் நேரடிப் பலி குறுவை விவசாயம். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு அரசே இதை ஒப்புக்கொண்டுள்ளது. நாகப்பட்டினத்தில் 30 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 1,720 ஹெக்டேராகவும், திருவாரூரில் 77,573 ஹெக்டேரிலிருந்து 46,338 ஹெக்டேராகவும் குறுவை சாகுபடி சுருங்கிப் போனது வெறும் புள்ளிவிவரம் அல்ல; பல்லாயிரம் விவசாயக் குடும்பங்களின் வயிற்றில், வாழ்க்கையில் விழுந்த அடி.

அடிபட்ட விவசாயிகள் அத்துடன் முடங்கிவிடவில்லை. சம்பாவையாவது பிடித்துவிடலாம் என மீண்டும் உழுதார்கள்; உரம் வாங்கினார்கள்; கடனாளியானார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ஆகஸ்ட் 26 அன்று விஜய் அரசு அறிவித்ததுதான் அந்த 45 நாள் நீர்த்திறப்பு. ஆனால், 120 முதல் 135 நாட்கள் வளரும் சம்பா பயிரை, வெறும் 45 நாள் தண்ணீரைக் கொண்டு எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற சாதாரணக் கேள்விக்கு இன்றுவரை அரசிடம் பதிலே இல்லை.

45 நாள் நாடகம் — முன்கூட்டியே தெரிந்த வஞ்சகம்!

அணையைத் திறக்கும்போதே விவசாயச் சங்கங்கள் எச்சரித்தன. குறுகிய கால நீர்த்திறப்பு சம்பாவுக்குப் போதாது; 105 முதல் 125 நாள் பயிருக்கு குறைந்தது 90 நாட்களாவது தண்ணீர் வேண்டும் என்றார் விவசாயச் சங்கப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன். மேட்டூர் தண்ணீர் கடைமடைக்கு வர நீண்டநாள் ஆகும்; எனவே ஆரம்பத்தில் அதிகப்படியான நீரும், பிறகு தொடர்ச்சியான நீரும் வேண்டும் என்று நாகை விவசாயிகள் கோரினர். இந்த 45 நாள் திட்டத்தால் கடைமடைக்குப் பயன் இருக்காது என அய்யாக்கண்ணுவும் எச்சரித்தார்.

ஆக, அபாயம் என்னவென்று முன்கூட்டியே விவசாயிகள், அரசின் முகத்தில் அறைந்து எச்சரித்து விட்டனர். அந்த எச்சரிக்கையைத் துளியும் மதிக்காத, மதிகெட்ட பொதுப்பணித்துறை மந்திரி, அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து, விஜய்யை வைத்துக் கூத்தடித்தனர். கோடிக்கணக்கில் பணத்தை ஏப்பம் விட்டனர். அதன் விளைவு விவசாயிகள் தலையில் விடிந்திருக்கிறது.

தலைஞாயிறில் காய்ந்த விதைகள்!

செப்டம்பர் 1 அன்று மேட்டூரில் 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. முக்கொம்பை அடைந்தபோது அது 1,500 கனஅடியாகக் குறைந்திருந்தது. செப்டம்பர் 10-ஐக் கடந்தும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் கடைமடை வாய்க்கால்களுக்குப் போதுமான நீர் சேரவில்லை. செப்டம்பர் 16-இல் நாகையைத் தொட்ட நீரும் பாசனத்துக்குப் போதவில்லை. கீழையூர் பகுதியில் ஒரு ஒழுங்கியை (Regulator) நம்பிய 5,200 ஏக்கருக்குப் போதுமான நீர் கிடைக்கவில்லை.

ஏட்டில் எழுதி வைத்து நக்கினால் சர்க்கரை இனிக்காது என்பதைப் போல, “கடைமடைக்குக் காவிரி வந்துவிட்டது” என்று ஆற்றில் தண்ணீர் தெரிவதைக் காட்டினால், பயிருக்குப் பாசனம் வந்துவிடுமா? ஆற்றில் நீர் வருவது வேறு; வாய்க்காலில் செல்வது வேறு; விவசாயிகளின் வயலை அடைவது வேறு; அந்தப் பயிரை அறுவடை வரை உயிரோடு காப்பாற்றுவது முற்றிலும் வேறு. அறுவடை வரை பயிர் பிழைத்திருந்தால்தான் விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும்.

செப்டம்பர் 30 நிலவரப்படி நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் ஹரிச்சந்திரா ஆற்றை நம்பிய 11,424 ஏக்கர் சம்பா ஆபத்தில் இருந்தது. இருபது நாட்களுக்கு முன்பு விதைத்த நெல் தண்ணீரின்றி காய்ந்து கிடந்தது. இனி தண்ணீர் வந்தாலும் 50 முதல் 60 சதவீத விதைகள்தான் முளைத்துப் பிழைக்கக்கூடும் என்று விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். குறுவையில் எட்டு ஏக்கருக்கும் மேல் இழந்த விவசாயி முருகதாஸ், சம்பாவில் மீண்டும் எட்டு ஏக்கரில் நேரடி விதைப்புச் செய்திருக்கிறார். இப்போது அதுவும் ஆபத்தில் நிற்கிறது. இதற்கு யார்தான் பொறுப்பு? யார் பதில் சொல்வது?

ஒரே ஆண்டில் விவசாயிகளை இரண்டு முறை நீரின்றி நடுத்தெருவில் நிறுத்துவதற்குப் பெயர்தான் நிர்வாகமா?

மானங்கெட்ட ஊடக நாடகம்!

செப்டம்பர் 1 அன்று விஜய் மேட்டூர் சென்றபோது ஊடகங்களுக்கு ‘ஜாக்பாட்’ அடித்து விட்டது போல குதூகலித்தனர். அணை திறப்பு, வரவேற்பு, பயணம், விஜய் ஒரு மூதாட்டியைச் சந்தித்தது, தான் அணிந்திருந்த விலை உயர்ந்த கூலிங்கிளாசை அவருக்குக் கொடுத்தது என அனைத்தும் ‘பரபரப்பு’ ‘பிரேக்கிங் நியூஸ்’ செய்திகளாகின.

அந்தக் கண்ணாடியின் மாடல் என்ன, விலை என்ன என்று ஆங்கில ஊடகங்கள்கூட ஆராய்ந்தன. அந்தக் கண்ணாடி Dior மாடல் என்றும், அதன் விலை சுமார் ரூ.46 ஆயிரம் என்றும் செய்திகள் வெளியாகின. ‘நடிகையின் வீட்டு நாய் கர்ப்பமானால் கூட கால் பக்கத்துக்குச் செய்தி போடுவார்கள்’ என்ற கேலி உண்மைதான் என்பதை ஊடகங்கள் தங்களின் இலட்சணத்தின் மூலம் வெளிக்காட்டிக் கொண்டன.

இந்த நிகழ்ச்சிக்குக் கோடிகளில் செலவானது பற்றியோ, பாட்டிக்குக் கூலிங்கிளாஸ் கொடுத்ததைப் பற்றிச் செய்தி போட்டு ஊடகங்கள் குதூகலம் அடைந்ததோ பிரச்சினையில்லை, அவர்களின் இயல்பே அதுவாகிவிட்டது. ஆனால், முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவையும் செய்தியாக்கிய ஊடகங்களுக்கு, அவர் திறந்துவிட்ட நீர் விவசாயிகளின் வயலை அடைந்ததா? விவசாயிகள் பயிரைப் பாதுகாத்தார்களா? என்பதைக் கண்காணிக்கும் சொரணை இருந்ததா என்பதுதான் நம் கேள்வி.

விஜய் கொடுத்த கண்ணாடி எந்த நிறுவனத்துடையது என்று கண்டுபிடிக்க முடிந்த ஊடகங்களால், அவர் திறந்த தண்ணீர் எந்த வாய்க்காலில் செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதா? கண்ணாடியின் விலையைத் தேடிய வேகத்தில், சம்பா விவசாயி ஏக்கருக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்று கணக்கிட முடியாதா? விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் பின்தொடர்ந்த கேமராக்களால், தண்ணீரின்றிக் காயும் வயலின் நடுவே நிற்கும் விவசாயிகளின் முகத்தை அதே தீவிரத்துடன் தமிழ்நாட்டின் கண்முன் கொண்டுவர முடியாதா?

ஒருசில நாளிதழ்கள் இந்தப் பிரச்சினையைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால் கேவலம், விஜய்யின் ஒரு கண்ணாடிக்குக் கிடைத்த கவனம், 11,424 ஏக்கரில் காயும் விதைக்கும் கிடைத்ததா? இதுதான் ஊடகங்களிடம் மக்கள் கேட்க வேண்டிய கேள்வி.

“தமிழ்நாட்டைத் தனிநாடாக அறிவியுங்கள்” – ஏன் இந்தக் கோபம்?

காவிரி நீர் கிடைக்காத நிலையில், விவசாயிகளின் கோபம் எந்த அளவுக்குச் சென்றிருக்கிறது என்பதற்கான மிகத் தீவிரமான வெளிப்பாடு அய்யாக்கண்ணுவின் அக்டோபர் 4 கருத்து.

அவர் தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கக் கூட்டத்தில், காவிரி நீர் கிடைக்காததால் குறுவை, சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன; டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளனர். அத்துடன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் நடைமுறைப்படுத்தாத நிலையில் “தமிழ்நாட்டைத் தனிநாடாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார் அய்யாக்கண்ணு.

இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் கண்ணோட்டம். ஆனால், இங்கு பேச வேண்டிய பிரச்சினை, “தண்ணீர் கொடு” என்று தொடங்கிய விவசாயிகளின் குரல் “தனிநாடு” வரை எப்படிச் சென்றது? என்பதுதான்.

நீதிமன்றம் இருக்கிறது; காவிரி மேலாண்மை ஆணையம் இருக்கிறது; மத்திய அரசு இருக்கிறது; மாநில அரசுகள் இருக்கின்றன; தீர்ப்புகளும் உத்தரவுகளும் இருக்கின்றன. ஆனால் கடைமடை வயலில் தண்ணீர்தான் இல்லை. இந்த முரண்பாடுதான் விவசாயிகளின் அரசியல் நம்பிக்கையைச் சிதைக்கிறது.

2018-லேயே புதிய ஜனநாயகம் இதழில் வெளியான “காவிரி: தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!” என்ற கட்டுரை, காவிரியை வெறும் இரு மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாக நீர்ப்பங்கீட்டுச் சிக்கலாக மட்டும் பார்க்க முடியாது; தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமையுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற விவாதத்தை முன்வைத்தது.

ஆம், இன்று காய்ந்து கொண்டிருக்கும் வயல் எழுப்பும் கேள்வி இன்னும் தீவிரமானது: விவசாயிகளின் பயிரைக் காப்பாற்ற வேண்டிய தண்ணீர் எங்கே?

முழுப் பொறுப்பையும் ஏற்று நிவாரணம் வழங்கு!

கர்நாடகத்தின் நீர்விடுவிப்பு, மழைப்பற்றாக்குறை, காவிரி மேலாண்மை அமைப்பின் செயல்பாடு என இந்த நெருக்கடிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் காட்டி தமிழ்நாடு அரசு தனது பங்குப் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது. காவிரியில் உரிய நீரைப் பெற வக்கில்லாத விஜய் அரசு, அதற்கும் ஒரு பேச்சுவார்த்தை நாடகத்தை கர்நாடகக் காங்கிரசு அரசுடன் சேர்ந்து நடத்த முயற்சி செய்து அம்பலப்பட்டுப் போனது. இப்போதோ, அதைப் பற்றிய கவலையே இல்லாமல், இடைத்தேர்தல் நாடகத்தில் மிகவும் பிஸியாகக் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

மேட்டூரில் எவ்வளவு நீர் இருக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்; 45 நாட்களுக்கு மட்டுமே திறக்கப் போகிறோம் என்பதும் தெரியும்; கடைமடைக்கு நீர் செல்ல எவ்வளவு நாள் ஆகும் என்பதும் தெரியும்; சம்பா பயிரின் கால அளவும் தெரியும்; விவசாயிகள் முன்கூட்டியே எச்சரித்ததும் தெரியும். இவை எல்லாம் தெரிந்திருந்த நிலையில்தான் இந்த நீர்த்திறப்பு நாடகம் நடத்தப்பட்டது.

எனவே அதன் விளைவாக விவசாயிகள் சந்தித்துள்ள இழப்புக்கான முழுப் பொறுப்பையும் விஜய் அரசுதான் ஏற்க வேண்டும். “கர்நாடகம் தண்ணீர் தரவில்லை; மழை பெய்யவில்லை” என்று கூறி அதன் முழுச் சுமையையும் விவசாயிகளின் தலையில் போட்டுவிட்டு அரசு கைகழுவிவிட்டுத் தப்பிக்க நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

குறுவை செய்ய முடியாமல் போன நிலங்களையும் இழப்பாகக் கணக்கிட வேண்டும். சம்பா விதைத்து முளைக்காமல் போன நிலங்களையும், நீர்ப்பற்றாக்குறையால் விளைச்சல் குறையும் நிலங்களையும் கணக்கிட வேண்டும். விதை, உரம், உழவு, இயந்திர வாடகை, தொழிலாளர் கூலி, நிலக்குத்தகை, கடன் வட்டி, எதிர்பார்க்கப்பட்ட வருமான இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உண்மையான நிவாரணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

அய்யாக்கண்ணுவின் சங்கம் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் கோரியுள்ளது. மற்ற விவசாயச் சங்கங்களும் வெவ்வேறு நிவாரணக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொண்டு, கிராமம் வாரியாக முழுமையான பாதிப்புக் கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணத்தைக் காலதாமதமின்றி வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

இன்று வறட்சி; நாளை அதிகன மழை – நிரந்தரத் திட்டம் என்ன?

இப்போது தண்ணீரின்றிக் பயிர் காய்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தீவிரமடையும். இந்த ஆண்டு எல் நினோ நிலை காரணமாக டெல்டா முழுவதும் பெருவெள்ளம் உறுதி என்று வானிலை ஆய்வாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிகமழை பெய்தால் அதை எதிர்கொள்ளவும், கிடைக்கும் நீரைச் சேமித்து அடுத்த வறட்சிக்குப் பயன்படுத்தவும் டெல்டாவுக்கு நிரந்தரத் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

இன்று தண்ணீர் இல்லாமல் பயிர் காயும்போது நீரை வயலுக்குக் கொண்டு சேர்க்க முடியவில்லை; நாளை அதிகமழை பெய்தால் அந்த நீரை வடித்து, சேமித்து, அடுத்த சாகுபடிக்குப் பயன்படுத்த எந்தத் திட்டமும் இல்லை. காவிரி டெல்டாவுக்கு வேண்டியது வறட்சி வந்த பிறகு நிவாரணமும், வெள்ளம் வந்த பிறகு ஹெலிகாப்டரில் சென்று வேடிக்கை பார்ப்பதும் அல்ல. ஆறுகள், கிளை ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள், குளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்த நீண்டகால நீர் மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இல்லையென்றால் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் அதே அரசியல் நாடகம்தான் மீண்டும் நடக்கும். முதலமைச்சரின் பார்வை, அதிகாரிகளின் அணிவகுப்பு, கேமராக்கள், சமூக வலைத்தள வீடியோக்கள் எல்லாம் வரும்; சில நாட்களில் அவை மறைந்துவிடும். ஆனால் காய்ந்த பயிரோ, நீரில் மூழ்கிய பயிரோ விவசாயிகளின் கடனாகவும் குடும்பத்தின் வாழ்வாதார இழப்பாகவும் மாறி நிற்கும்.

அதனால்தான் டெல்டா விவசாயிகள் எழுப்ப வேண்டிய கேள்வி “இன்று தண்ணீர் எங்கே?” என்பதோடு முடிவதில்லை. கிடைக்கும் நீரை உரிய காலத்தில் வயலுக்குக் கொண்டு சேர்க்கவும், அதிகமழையைச் சேமித்துப் பாதுகாக்கவும், வறட்சி–அதிகமழை இரண்டிலிருந்தும் விவசாயத்தைக் காக்கவும் விஜய் அரசின் நிரந்தரத் திட்டம் என்ன?

ஷட்டரைத் திறந்தது சாதனையல்ல; விவசாயிகளின் வயலைக் காப்பாற்றுவதுதான் சாதனை!

காவிரி விவசாயிகள், விஜய்யிடம் புகைப்படமோ ரீல்ஸ்களோ கேட்கவில்லை; வரவேற்பு கேட்கவில்லை; கண்ணாடி கேட்கவில்லை. குறுவைக்குத் தண்ணீர் கேட்டார்கள்; அது கிடைக்கவில்லை. சம்பாவுக்காவது கொடு என்றார்கள்; 45 நாட்கள் போதாது என்றார்கள்; கடைமடை வரை கொண்டு வா என்றார்கள்; பயிரைக் காப்பாற்று என்றார்கள். இப்போது பயிர் காய்ந்தால் நிவாரணமாவது கொடு என்கிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் ஓர் அரசின் பதில் “மேட்டூர் அணையைத் திறந்துவிட்டோம்” என்பதாக இருக்க முடியுமென்றால், இதைவிட சைக்கோத்தனம் வேறேதும் இருக்க முடியாது. மேட்டூரில் ஷட்டரைத் திறந்தால் மட்டும் பாசனம் என்று அர்த்தமில்லை; கடைசி வயலில் நெல் அறுவடையாகி விவசாயிகளின் வீட்டுக்குச் செல்வதுதான் பாசனம் என்பதன் பொருள். அந்த அறுவடை இல்லாமல் போனால் அதற்கான பொறுப்பிலிருந்து அரசைத் தப்பவிடக் கூடாது. ஏனெனில் விஜய் அணையைத் திறந்தாரா என்பது வரலாறு அல்ல; அவர் திறந்த தண்ணீர் விவசாயிகளின் வயலை அடைந்து பயிரைக் காப்பாற்றியதா என்பதுதான் வரலாறு.

தமிழ்ச்சுடர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads