விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயிர்களை காக்கும் விவசாயிகள்
திருச்சி: முசிறி அருகே, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, பயிர்களை காத்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மங்களம் பகுதியில், 200 ஏக்கருக்கும் அதிகமாக மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் நடவு செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு பயிர்கள், வறட்சியால் வாடுகின்றன.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், திருச்சி, கரூர் உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள், அருகில் உள்ள போர்வெல்களிலும், டேங்கர் லாரிகளிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி, குடங்களில் சுமந்து வந்து ஊற்றி, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததாலும், மழை பெய்யாததாலும் கடும் வறட்சி ஏற்பட்டு, நீர்மட்டம் குறைந்து, பயிர்கள் வாடி வதங்குகின்றன.
'சாகுபடிக்கு செலவழித்த பணமும், உழைப்பும் வீணாகக்கூடாது என்பதால், போர்வெல் கிணறு தண்ணீர் மற்றும் டேங்கர் லாரிகளில் விலைக்கு தண்ணீர் வாங்கி, பயிர்களுக்கு ஊற்றுகிறோம். தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.