"விளையாடாமலேயே காயம் ஏற்படுவது ஆபத்து".. ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் வார்னிங்
"விளையாடாமலேயே காயம் ஏற்படுவது ஆபத்து".. ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் வார்னிங்
மும்பை: இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போட்டிகளில் விளையாடாமலேயே, உடற்பயிற்சியின் போது அடுத்தடுத்து காயம் ஏற்படுவது நல்லதல்ல என்றும், அவர் தொடர்ந்து காயத்தில் சிக்குவது அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவில்லை. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தீவிர உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு காலில் புதிதாக எலும்பு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த 4 மாதங்களாக எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் தவித்து வருகிறார்.
2026 ஐபிஎல் தொடரில் தொடங்கிய முதுகுவலி பிரச்சனை, பின்னர் தசைநார் காயம் என அடுத்தடுத்து நீண்டு கொண்டே செல்கிறது. ஒருநாள் போட்டிகளில் பாண்டியாவால் 10 ஓவர்கள் முழுமையாக பந்துவீச முடியாது என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏற்கனவே வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய இர்பான் பதான் கூறுகையில், "ஹர்திக் பாண்டியா விளையாடாமலேயே தொடர்ந்து காயமடைவது எந்த ஒரு வீரருக்கும் துரதிர்ஷ்டவசமானது. தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி, பணிச்சுமை அதிகமாகி காயம் ஏற்பட்டால் அதை புரிந்து கொள்ளலாம். ஆனால் போட்டிகளில் விளையாடாமல், மறுவாழ்வு பயிற்சியில் இருக்கும்போதே அடுத்தடுத்து காயம் அடைவது நல்ல அறிகுறி அல்ல.
இதுபோன்ற தொடர் காயங்கள், பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை நிச்சயமாக உடைத்துவிடும்" என்று காட்டமாக தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி தொடர்ந்து கேள்விக்குறியாக இருப்பதால், இந்திய அணி நிர்வாகம் மாற்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும் என்று பதான் வலியுறுத்தியுள்ளார். இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி அவரை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"நிதீஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சு வேகம் மற்றும் உழைக்கும் விதம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அவரிடம் நல்ல திறமை உள்ளது" என பதான் பாராட்டினார். நிதீஷ் ரெட்டி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 ஓவர்கள் வீசி 45 ரன்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதிக ரன்களை கொடுத்தாலும் அவர் விக்கெட் வீழ்த்தி இருப்பது நல்ல துவக்கமாக அமைந்தது.