📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 03:04 AM

விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் நலமுடன் உள்ளார்

விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் நலமுடன் உள்ளார்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னையில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரது சகோதரி கதீஜா விளக்கம் அளித்துள்ளார்.

கிண்டி ஒலிம்பியா சிக்னல் அருகே இன்று அதிகாலை 3:30 மணியளவில் அமீன் தனது நண்பருடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அமீன் மற்றும் அவரது நண்பருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு காரில் பயணித்த நபரும் காயமடைந்து கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து பரவி வரும் செய்திகளுக்கு விளக்கமளித்துள்ள அமீனின் சகோதரி கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அமீன் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவரது நண்பரே காரை ஓட்டினார். அமீன் பக்கத்து இருக்கையில்தான் அமர்ந்திருந்தார். சிக்னல் சிவப்பு விளக்காக இருந்தபோதிலும் எதிரே வந்த வாகனம் முன்னால் நகர்ந்ததால் இந்தச் சிறிய மோதல் ஏற்பட்டது.

இறைவனின் அருளால் அமீன், அவரது நண்பர் மற்றும் எதிரே வந்த காரில் இருந்தவர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஊடகங்கள் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பிறகே பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீன், பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். சமீபத்தில் 'பெத்தி திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் 'சிகிரி சிகிரி' பாடலைப் பாடியிருந்தார்.