Vishwanath & Sons Exclusive: “உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் `விஸ்வநாத் & சன்ஸ்’!” -
Vishwanath & Sons Exclusive: “உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் `விஸ்வநாத் & சன்ஸ்’!” -
வெங்கி அட்லூரி ஷேரிங்ஸ்!
“ `விஸ்வநாத் & சன்ஸ்’ - உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் படம். எனக்கு சூர்யா சார் மீது பெரிய மரியாதை உண்டு. அவரை எப்படி வேண்டுமென்றாலும் செதுக்கிப் பார்க்கலாம். எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை எந்த இயக்குநரிடம் கேட்டாலும் சொல்வார்கள். ‘விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை ஒரு வழக்கமான கதையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு நடிகராக சூர்யா சாரும், ஒரு இயக்குநராக நானும் இணைந்து ஒரு நல்ல முயற்சியைச் செய்திருக்கிறோம் என நம்புகிறேன். அவரை மாதிரி பெரிய நடிகரைவைத்து படம் செய்யும்போது நிறைய உழைப்பும் புத்திசாலித்தனமும் வேண்டும். ஆந்திராவாக இருந்தாலும், தமிழ்நாடாக இருந்தாலும் மக்களின் மனோபாவம் ஒன்றுதான். சூர்யா சார் இதில் முழுதாக வெளிப்பட்டிருப்பதால் பல ஆச்சர்யங்கள் கிடைக்கும்...” - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்' படத்துக்காக, தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
“முற்றிலும் குடும்பக்கதையாக அமைந்திருக்கும் போல் இருக்கிறதே!”
“நான் இதில் முற்றிலும் வேறு ஒரு விஷயத்துக்குப் போக நினைத்தேன். நாம் எல்லோருமே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம். சினிமாவிலும் அப்படிப்பட்ட உறவுகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது. நம் வீடு, சுற்றி நடக்கும் விஷயங்கள், சமூகம்... அதில் உறவுகளின் நிலை பற்றியெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் சினிமாவில் நிறைய ஆக்ஷன் படங்களைப் பார்த்துவிட்டோம். சந்தோஷமாக ஒரு குடும்பக் கதையை, திரையில் சொல்ல விரும்பினேன். ஃபீல் குட் படங்கள் மாதிரி ஒரு நம்பிக்கையையும், அன்பையும், நல்லுணர்வையும் விதைக்கத் திட்டமிட்டோம். தியேட்டரைவிட்டு வரும் போது சந்தோஷமான மனநிலையை நிச்சயமாக அடைய முடியும்.
இது, சஞ்சய் விஸ்வநாத் என்ற முன்னாள் சர்வதேச துப்பாக்கி சுடுபவரின் கதை. அவரது குடும்பப் பொறுப்புகள், திடீரென ஒரு காதல் வந்து அமைகிற விதம் என்பது பற்றியெல்லாம் ஒரு எமோஷனல் ஃபேமிலி டிராமாவாக ஆக்கியிருக்கிறோம்.
திரைக்கதை, சுவாரஸ்யத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. அப்படி எல்லா தரப்பு மக்களையும் இப்படி ஒரு ஃபேமிலி டிராமாவில் கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்தேன். பெரிய ஆக்ஷன், அடிதடி என இல்லாமல் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு எமோஷனலாகவும் படம் அமைந்துவிட்டது.’’
“சூர்யா எப்படி இதற்குள் வந்தார்..?”
“சூர்யா சாரிடம் முன்பே பேசியிருந்தேன். எங்களிடையே அடிக்கடி உரையாடல்கள் நிகழும். நான் சொன்ன கதை பயோபிக் வடிவத்தில் இருந்தது. அவர் ஏற்கெனவே அது மாதிரி செய்திருந்தார். அப்புறம்தான் இந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்' கதையை 2D ராஜசேகரிடம் சொன்னேன். அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னதும் அவரும் ரசித்தார். அவரை மாதிரி பக்குவத்தில் இருக்கிற நடிகரைவைத்துப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை என் மனதில் கனிந்துகொண்டேயிருக்க, அது நடந்தேவிட்டது. அவரால் எந்த கேரக்டருக்கும் வடிவம் தர முடிகிறது. 45 படங்கள் வரைக்கும் செய்துவிட்டு அதற்கடுத்த கட்டத்துக்குப் பயணப்படுகிற இடத்தில் அவர் இருக்கிறார். சில விஷயங்களை, சில பேரைவைத்துச் சொன்னால்தான் அந்தச் செய்தி போய்ச் சேரும். நடிப்பின் நுணுக்கமான எல்லையை சூர்யா சார் நெருங்கிக்கொண்டிருப்பது இந்தப் படத்தில் தனியாகத் தெரியும். இவ்வளவு இயற்கையான நடிகனைக் கையாள்வது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. மமிதா, ராதிகாவோடு அவரின் காட்சிகளில் அவ்வளவு பிரமாதமாகச் செய்தார். ஒரு இயக்குநரைச் சுதந்திரமாக இயங்கவிட்டுப் பார்க்கும் அவரது அன்பும் முக்கியமானது. சில படங்கள் நாம் பார்க்கிற திரையோடு முடிந்து விடுவதில்லை. `விஸ்வநாத் & சன்ஸ்' அப்படி இருக்கும்.’’
“ ‘கருப்பு' போன்ற கமர்ஷியல் வெற்றிக்குப் பிறகு சூர்யாவிடமிருந்து ஒரு குடும்பப் படம் வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“அவரே ‘கருப்பு' படத்துக்குப் பிறகு ‘விஸ்வநாத் & சன்ஸ்' வருவதை விரும்பினார். ‘கருப்பு’ படத்தில் அவர் கடவுளாகவே வந்தார். அது தந்த அனுபவத்திலிருந்து வேறொரு தளத்துக்குச் செல்ல அவர் விரும்பினார். ‘வாரணம் ஆயிரம்' செய்த பிறகுதான் ‘சிங்கம்' போன்ற படங்கள் அவருக்கு அமைந்திருக்கிறது. எப்போதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர் முற்றிலும் வேறொரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வருவதை விரும்புவார்கள். அவரது படங்களின் லைன்அப் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. இத்தனை படங்கள் செய்திருந்தாலும் தெளிந்த மனநிலையில், எளிமையாக அணுகக்கூடியவராக இருக்கிறார். படப்பிடிப்பின் கடைசி நாளில் அவருக்கு நல்ல காய்ச்சல் இருந்தது. எப்படித் தொடர்வது என்று எல்லோரும் தயங்கியபோது நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரவு வரை ஷூட்டிங் நடந்து முடிந்தது. படத்தின் தேவைகள், சூழல் உணர்ந்து சினிமாவை நேசித்து வளர்ந்தவராக இருப்பதால் இதெல்லாம் சாத்தியமாகி யிருக்கின்றன.’’
“20 வயது வித்தியாசத்தில் ஒரு காதல் வந்திருப்பதை டீசர் சொல்கிறதே?”
“ரொம்பவும் நுணுக்கமாகவும், எல்லை தாண்டாமலும் Innocence மிகுந்தும் சொல்லவேண்டிய கதை. மமிதாவை ‘பிரேமலு' படத்தில் பார்த்தபோதே அந்த ‘Innocence’ படு இயற்கையாக அமைந்திருந்தது. நிச்சயம் மமிதா அவரது ஆன்மாவை இதில் படரவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யா சார், ராதிகா மேடம் இவர்களோடு சேர்ந்து நடிப்பது சிரமமான வேலை. அவர்கள் ஒன்றைச் செய்து முடித்துவிட்டு உடனடியாக அடுத்த எமோஷனுக்குப் போய்விடுவார்கள். அதையும் சரியாகப் புரிந்துகொண்டு நடித்தார் மமிதா.
அதே மாதிரி ராதிகா மேடம். அவரது அனுபவம் பேசுகிறது. அம்மா, மகனாக ராதிகா-சூர்யா நடிக்கிறார்கள். அவ்வளவு Comfort Level இருந்தது. படத்தின் உயிரான இடங்கள் அதில் இருக்கின்றன. ராதிகா, மமிதா, சூர்யா சார் காம்பினேஷன் படத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த மூன்று பேரும் சேர்ந்து படத்தை ஹோல்டு பண்ணிய விஷயமும் நடந்தது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து நடிக்கும்போது நாம் எதிர்பார்ப்பது இரு மடங்காகும். சில சமயம் பல மடங்காகும். சில இடங்களில் டயலாக்கையும் தாண்டி இவர்களின் எக்ஸ்பிரஷனே நிற்கும். அதோடு ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு ரவீனா டாண்டன் முக்கிய இடத்தில் வருகிறார்.’’
“ஜி.வி.பிரகாஷுடன் இது மூன்றாவது படம்... எப்படியிருந்தது?”
“இன்னும் அவர்கூட வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லா வேலைகளிலும் சரியாக இருக்கிறார். நடிப்பு, இசையமைப்பு என்று இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாலும் எதிலும் தாமதமே இல்லை. செய்கிற வேலைகளும் அவ்வளவு சுத்தம். என்னுடைய இந்தப் பயணத்தில் ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி வந்தார். என் உலகத்தோடு அப்படியே வந்து இணைந்து நிற்பார். என்னைச் சரியாகப் புரிந்துகொள்வதில், ஃபாலோ செய்வதில் நிமிஷ் ரொம்பவும் துல்லியம். அதே மாதிரி நவின் எடிட்டராக என் எல்லாப் படங்களிலும் இருக்கிறார். என் சினிமா எண்ணங்களை அப்படியே பின்தொடர்வார். இவர்களை நான் எப்போதும் விரும்புவேன். உணர்வோடு கூடிய இந்தப் படத்தை தமிழ் மக்கள் பெரும் கனிவோடு வரவேற்பார்கள் என நம்புகிறேன்.”