வலது கால் பிரச்னை... இடது காலில் அறுவை சிகிச்சை!
வலது கால் பிரச்னை... இடது காலில் அறுவை சிகிச்சை! - அலட்சிய மருத்துவர்களால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
இரு கால்களிலும் வலியால் துடித்துக்கொண்டிருந்த நிலையில், பெற்றோரான ஷேக் அப்துல் சலாம், மீரா ஆகியோர் பரிதவித்தபடி சிறுவனைத் தேற்றிக் கொண்டிருந்தனர்.
வலது காலில் மேற்கொள்ளவேண்டிய அறுவை சிகிச்சையை, இடது காலில் செய்து 15 வயது சிறுவனின் எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்திருக்கிறது.
நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஷேக் அப்துல் சலாம். அவருடைய மகன் ரஹீம், கடந்த 19-ம் தேதி வீட்டுக்கருகே பைக்கிலிருந்து விழுந்ததில், அவரின் வலது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட அவருக்கு, தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.
``இடது கால்லயும் மாவுக்கட்டு போட்டிருந்தாங்க...’’
பதறிப்போய் டாக்டர்கிட்ட, “வலது கால்லதானே ஆபரேஷன்னு சொன்னீங்க... இடது கால்ல ஏன் கட்டுப் போட்டிருக்கீங்க?”ன்னு கேட்டேன். உடனே டாக்டர், என் மகனை மறுபடியும் ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. கேட்டதுக்கு, “ஒண்ணுமில்லை... உங்க மகனுக்கு இடது கால்ல இருந்து சவ்வு எடுத்து வலது கால்ல போட்டிருக்கோம். சீக்கிரம் குணமாகிடும்”னு சொன்னாங்க.
``டூட்டி டாக்டர் மிரட்டினார்...’’
மறுபடியும் ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து மகனை வெளியே கூட்டிக்கிட்டு வந்தப்போ, வலது கால்ல மாவுக்கட்டு இல்லை. இடது கால்ல போட்டிருந்த கட்டையும் அவிழ்த்திருந்தாங்க. என் மகன்கிட்ட கேட்டப்போ, `இடது கால்ல தவறுதலா ஆபரேஷன் செஞ்ச இடத்துல தடம் தெரியாம இருக்கத்தான் கட்டை அவிழ்த்ததா டாக்டரு சொன்னாரு’ன்னு சொன்னான். `அதனால வலி அதிகமா இருக்கு’ன்னு அவன் சொன்னதும், டாக்டர்கிட்ட முறையிட்டேன். ஆனா டூட்டியில இருந்த டாக்டர், “ஏதாவது பேசினா, ஆஸ்பத்திரியில கலாட்டா பண்ணுறதா போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுத்துடுவேன்”னு மிரட்டினார்.
டாக்டர்களோட பதற்றத்தையும் கோபத்தையும் பார்த்ததும், ஏதோ தப்பு நடந்திருக்குன்னு பயந்து உறவினர்களுக்குத் தகவல் சொன்னோம்” என்றவர், “எம் மகனுக்கு ரெண்டு கால்லயும் பிரச்னை ஆயிடுச்சே... அவன் மறுபடியும் நடப்பானா சார்?” என்றார் வேதனையுடன்.
சிறுவனுக்கு அளித்த சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டத் தலைவர் பீர் மஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
தவறு எப்படி நடந்தது?
இது குறித்து பீர் மஸ்தான் பேசுகையில், ``ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். ஆனால், மருத்துவர்களின் அலட்சியத்தால் வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தவறு எப்படி நடந்தது... அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நல்ல மனநிலையில் இருந்தாரா அல்லது போதையில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்ததோடு, சிறுவனின் பெற்றோரையும் மிரட்டியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்துவதுடன், சிறுவன் குணமடையும் வரை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தினக்கூலி செய்து வறுமையில் வாடும் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.
இது குறித்து நெல்லை அரசு மருத்துவமனை டீன் செல்வராஜனிடம் கேட்டதற்கு, “அறுவை சிகிச்சையில் தவறு எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. சிறுவனுக்கு, பாதிக்கப்பட்ட காலில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் சார்பாக அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பணியாளர் களிடம் விசாரணை நடத்தியிருக் கிறார்கள். அந்தக் குழுவினர் தங்களின் அறிக்கையை சுகாதாரத் துறைக்கு அளிப்பார்கள்” என்று முடித்துக்கொண்டார்.
மருத்துவர்களைச் சமூகம் கடவுளாகப் பார்க்கிறது. கடவுளே தவறு செய்யலாமா?