📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 01, 2026 06:31 AM

வணிகம் செய்வது அரசின் கடமை அல்ல!

வணிகம் செய்வது அரசின் கடமை அல்ல!

"குடி குடியைக் கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்" என்று கூறி மதுவிலக்கு அமல்படுத்தப்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது இன்றைய காலத்துக்கு சாத்தியமா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் இதுவரை மதுவிலக்கை அமல்படுத்திய அரசாங்கங்களுக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தபோது நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் பலதரப்பட்ட மதுவகைகள் தாராளமாக கிடைத்தன. அந்த நேரத்தில் சனிக்கிழமைதோறும் மாலை சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் ரெயிலிலும், பஸ்களிலும் கூட்டம் அலைமோதும். தாகத்தை தணித்து தன்னிலை மறக்க குடிமகன்கள் அங்கு படையெடுப்பார்கள். அந்த கூட்டம் போதை தெளிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் சென்னை திரும்பும்.

1948 முதல் 1971 வரை தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. ஆனால் ஊருக்கு ஊர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்தது. அண்டை மாநிலங்களில் இருந்து அதிகமாக மது கடத்தி கொண்டு வரப்பட்டது. இதை தடுக்கவேண்டிய காவல் துறையிலும், கலால் துறையிலும் லஞ்சம் புரையோடியது. இதனால் 1971-ல் தி.மு.க. அரசு இருந்தபோது மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. கள், சாராயம், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மதுவகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்பு 1973-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலேயே அனைத்து கடைகளும் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1981-ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

1983-ல் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இதன் பணி மொத்த விற்பனையை தனியார் கடைகளுக்கு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. 1987-ல் கள், சாராய கடைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதே தவிர பிராந்தி, விஸ்கி கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தன. 1989-90-ல் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கள், சாராய விற்பனைக்கு அனுமதி அளித்தாலும், அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அந்த கடைகளுக்கு மட்டும் தடைவிதித்து பிராந்தி, விஸ்கி கடைகளுக்கான அனுமதியை தொடர்ந்தது. ஆனால் 2003-ம் ஆண்டு முதல் தனியார் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பிராந்தி, விஸ்கி, பீர், ரம் போன்ற இந்தியாவில் தயாராகும் மது வகைகளின் சில்லரை விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. 4,048 மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்துகிறது. இந்த கடைகள் மூலம் அரசுக்கு வரி வருவாயாக ஆண்டுக்கு ரூ.48,344 கோடி கிடைக்கிறது.

தற்போது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை முதல் கட்டமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகிய செய்திகள் மிகவும் வரவேற்புக்குரியது. அரசின் கடமை சட்டம் இயற்றுவதும், நிர்வாகத்தை நடத்துவதும்தானே தவிர வணிகம் செய்வது அல்ல. வணிகத்தை தனியார் நடத்தினால்தான் புதுப்புது தொழில் முனைவோர் உருவாகுவார்கள். அரசுக்கு ஒவ்வொரு கடைக்கும் லைசென்சு கட்டணம் தனியாகவும், பிற வரி வருவாயும் கிடைக்கும். தனியார் கடைகளுக்கு இடையே நடக்கும் வியாபார போட்டியால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். மொத்தத்தில் ஊழலற்ற அரசை நடத்த தொடங்கியிருக்கும் அரசு, அந்த பாதையில் நிர்வாகத்தை மட்டும் நடத்தட்டும். மதுக்கடைகளை தனியாருக்கு கொடுத்து விடுவதே சாலச்சிறந்ததாகும்.