வரும் ஆண்டுகளில் எல் நினோவால் வறட்சி ஏற்படும்... அபாயம்:மழைநீரை சேமிக்க போதிய நடவடிக்கை தேவை
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் பல ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் போன நிலையில், தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 'எல் நினோ' பாதிப்பால் வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதால் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை முழுமையாக சேமிக்க ஏரி, குளங்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. தென்பெண்ணை, சங்கராபரணி உள்ளிட்ட ஆறுகளும், அவற்றுடன் இணைந்துள்ள ஏரி, குளங்களும் மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய நீராதாரங்களாக உள்ளன.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில், 505 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில், 600 க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.
மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 1,060.30 மி.மீ. இதில் தென்மேற்கு பருவமழை சராசரியாக, 356.66 மி.மீ., வடகிழக்கு பருவமழை, 638.11 மி.மீ. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில், 526.66 மி.மீ. மட்டுமே மழை பதிவானது
இது சராசரியை விட, 111.45 மி.மீ. குறைவு. இதனால் பல ஏரிகள் நிரம்பாமல் வறட்சி நிலை உருவானது.
பெஞ்சல் புயல் அத்துடன் கடந்த, 2024 ம் ஆண்டு 'பெஞ்சல்' புயலின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல ஏரிகள் உடைந்து, பெருமளவு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகப்படியான தண்ணீர் கடலில் கலப்பதும், அடுத்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாமல் ஏரிகள் வறண்டு கிடப்பதும் நீர் மேலாண்மையில் உள்ள குறையாக உள்ளது.
எல் நினோ தாக்கம் 2026 ம் ஆண்டில் 'எல் நினோ' நிகழ்வு வலுப்பெற்று, அதன் தாக்கம் வரும், 2027 தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என சர்வதேச அளவில் எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும். விழுப்புரம் மாவட்டத்திலும் 2027-28ம் ஆண்டுகளில் கடும் வறட்சிக்கான வாய்ப்புள்ளது.
வாய்க்கால்கள் சீரமைப்பு இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்கு முன்பாக ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகள், வரத்து வாய்க்கால்கள், உபரி நீர் செல்லும் கால்வாய்கள் ஆகியவற்றை மிக விரைவாக ஆய்வு செய்து மழை நீரை நீர்நிலைகளுக்கு கொண்டு வந்து சேமிக்க தயாராக வேண்டும்.
ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மதகு, கலிங்கல், உபரி நீர்வழி ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான பணிகளை மழைக்கு முன்பே முடிக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து
ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அரசு கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
வீடுகள், தனியார் கட்டடங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைளிலும் மழைநீரை சேகரிக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எதிர்வரும் வட கிழக்கு பருவமழையில் கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் ஏரிகளில் சேமித்தால் மட்டுமே அடுத்து வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய குடிநீர் மற்றும் விவசாய நீர் பற்றாக்குறையை ஓரளவிற்காவது சமாளிக்க முடியும்.