வடிவமைப்புப் பொறியியல் பாதுகாப்பு விருதுகள் 2026
கட்டட, கட்டுமான ஆணையம் இந்த ஆண்டின் ‘வடிவமைப்புப் பொறியியல் பாதுகாப்பு விருது 2026’ (DESA 2026) மூலம் தொழில்முறைப் பொறியாளர் நால்வர், அவர்களின் நிறுவனங்கள், திட்டக் குழுக்களை அங்கீகரித்துச் சிறப்பித்துள்ளது.
தற்போது 19வது ஆண்டாக வழங்கப்படும் இவ்விருதைப் புதிய மத்திய ஆள்பலத் தளம் (CMPB), ஐஓஐ சென்ட்ரல் பொலிவார்ட் டவர்ஸ் (IOI Central Boulevard Towers), சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் அமைந்துள்ள ‘ஜெனியோ’ (Geneo) ஆகிய மூன்று பெருந்திட்டங்கள் தட்டிச் சென்றுள்ளன.
இத்திட்டங்கள் பாதுகாப்பான வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றில் புதிய தரநிலைகளை அமைத்துள்ளதோடு, சிங்கப்பூரின் முன்னணிப் பொறியியல் நுட்பங்களுக்கும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் நீடித்த படைப்புகளாகத் திகழ்கின்றன.
இந்தியப் பொறியாளருக்கு விருது
40 வயதான தொழில்நுட்ப இயக்குநர் துசியந்தன் பொன்னம்பலம், சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் அமைந்துள்ள ‘ஜெனியோ’ திட்டத்தில் பல கட்டுமானச் சவால்களை எதிர்கொண்டார். பொறியியல் முறையில் வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூரின் முதலாவது 27 மீட்டர் மர வளைவுக் கூரை அமைப்பை (Mass Engineered Timber) உருவாக்குதல், சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய, அதிர்வுக் கட்டுப்பாடு கொண்ட ஆய்வகங்களை வடிவமைத்தல், இயற்கை நில அமைப்பிற்கு ஏற்ப நிலத்தடித் தளத்தை வடிவமைத்தல் ஆகியவை இவர் தம் குழுவுடன் சந்தித்த சில பொறியியல் சவால்கள்.
இத்தகைய பொறியியல் கட்டுமானச் சாதனையை உருவாக்குவதற்குச் சிக்கலான சவால்களை எதிர்கொண்ட பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், ஒப்பந்ததாரர்கள், நிபுணர்கள், வாடிக்கையாளர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்ட ஒட்டுமொத்தத் திட்டக் குழுவின் பங்களிப்பை இது பிரதிபலிக்கிறது. எனவே, அந்தக் கூட்டு முயற்சிக்கும் திட்டம் முழுவதும் பின்பற்றிய பொறியியல் அணுகுமுறைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இவ்விருதைப் பார்ப்பதாகக் கூறினார் திரு துசியந்தன் பொன்னம்பலம்.
மேலும், “வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு ஒட்டுமொத்தப் பொறியியல் பணிமுறையையும் மறுவடிவமைக்கும் என்று நம்புகிறேன். இது பல வழக்கமான பணிகளைத் தானியக்கமாக்க உதவி அளித்து, பொறியாளர்கள் மேலும் திறன்மிக்க முறையில் பணியாற்ற வழிவகுக்கும். ஆனால், இது வலுவான அடிப்படைப் பொறியியல் கோட்பாடுகளை மேலும் முக்கியமாக்குகிறதே தவிர, அவற்றின் அவசியத்தைக் குறைக்கவில்லை. சவால்களைப் புரிந்துகொண்டு, சரியான பொறியியல் முடிவுகளை எடுத்து, ஒரு தீர்வு பாதுகாப்பானதாகவும் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் உள்ளதா என்பதை உறுதிசெய்யக்கூடிய பொறியாளர்கள் நமக்கு இன்னமும் தேவைப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தீவிர நகரமயமாக்கப்பட்ட சூழலில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், கடுமையான பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், பொறியாளர்கள் தற்போதுள்ள உள்கட்டமைப்புகளையும் கட்டடங்களையும் கருத்தில் கொண்டு புதுமையான முறையில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கட்டட, கட்டுமான ஆணையத்தின் கட்டடப் பொறியியல் குழு இயக்குநரான பொறியாளர் டான் சுன் யோங்.
“சிக்கலான நில அமைப்பியல், வடிவமைப்பு வரம்புகளைப் பல்லாண்டுகளாகச் சமுதாயத்திற்குப் பயன்படும் மிகப்பெரிய மேம்பாடுகளாகத் திறன்மிக்க பொறியியல் எவ்வாறு மாற்ற முடியும் என்பதற்கு இந்த ஆண்டின் ‘வடிவமைப்பு, பொறியியல் பாதுகாப்பு விருது’ வெற்றியாளர்கள் சிறந்த சான்றாவர்,” என்று அவர் குறிப்பிட்டார்.