📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 23, 2026 06:04 PM

சிங்கப்பூர் தனக்கேற்ற வகையில் புதிய தொழில்நுட்பத்தைத் தழுவும்: பிரதமர்

சிங்கப்பூர் தனக்கேற்ற வகையில் புதிய தொழில்நுட்பத்தைத் தழுவும்: பிரதமர்

சிங்கப்பூர் தனக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப உலகில் பெரிய மாற்றங்கள் இடம்பெற்றபோதெல்லாம் நாடு அவற்றுக்கு ஈடுகொடுத்து வந்துள்ளதை அவர் சுட்டினார்.

இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கண்டுவரும் வேகமான முன்னேற்றங்கள் பற்றிக் கடந்த ஆண்டு பேசியதைத் திரு வோங் நினைவுகூர்ந்தார். ஒரே ஆண்டில் பலரும் எதிர்பார்த்ததைவிட அந்தத் தொழில்நுட்பம் வளர்ச்சிகண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்போது ‘ஏஐ’ முகவர்கள், ஒருவரின் வேலைகளை முழுமையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதை அவர் சுட்டினார். சிறிய நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும். முன்பு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த ஆற்றல்களை இப்போது ‘ஏஐ’ அவர்களுக்கு வழங்குகிறது.

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றியும் பிரதமர் பேசினார்.

‘ஹெல்தியர் எஸ்ஜி’ செயலின் மூலம் அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியோடு சிங்கப்பூரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

நோய்களைத் துல்லியமாகக் கண்டறிவதிலும் ‘ஏஐ’ உதவுகிறது. மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனையில் அதனால் கைகொடுக்க முடியும் என்றார் திரு வோங்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மரபணுத் தொகுப்பியலிலும் நாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் கூறினார். ஒருவரின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிய 20 ஆண்டுகளுக்கு முன்னர் பல மில்லியன் வெள்ளி செலவாகும். இன்று சில நூறு வெள்ளியில் அதைச் செய்யமுடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சில வகை நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிகச் சாத்தியம் உள்ளோரை அடையாளங்காண மருத்துவர்களுக்கு மரபணுப் பரிசோதனை உதவலாம் என்றார் அவர். சுகாதார அமைச்சு, சில முன்னோடித் திட்டங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தம்மிடம் கூறியதாகத் திரு வோங் சொன்னார்.

சிங்கப்பூர், துடிப்பான இத்தகைய முன்னேற்றங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப மாற்றம் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பத்தாண்டுக்கு முன்னர் வாடகை டாக்சி செயலிகள் சந்தையில் வந்தன. சில நகரங்கள் அவற்றைப் புறக்கணித்தபோதும் சிங்கப்பூர் அதனை வரவேற்றதை அவர் சுட்டினார்.

இன்று பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் கிடைத்துள்ளன; ஓட்டுநர்களும் அதிக நீக்குப்போக்கோடு செயல்பட்டு வருவாய் ஈட்டுவதற்குப் புதிய வழிகளைப் பெற்றுள்ளனர்.

தானியக்க வாகனங்கள் பொங்கோலில் சோதிக்கப்படுகின்றன. அவற்றின் செயல்பாடு ஊக்கமளிப்பதாகத் திரு வோங் சொன்னார்.

அதிகரித்துவரும் போக்குவரத்துத் தேவைகளை எதிர்கொள்ளப் புதிய தீர்வுகளும் தேவைப்படுகின்றன என்றார் அவர்.

பேருந்து ஓட்டுநர்களை வேலைக்கு எடுப்பது சிரமமாகி வருகிறது. டாக்சி ஓட்டுநர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 60 வயதை எட்டிவிட்டனர்.

இத்தகைய மனிதவள நெருக்குதல்களைத் தணிப்பதில் தானியக்க வாகனங்கள் உதவலாம் என்று திரு வோங் தெரிவித்தார்.

இருப்பினும் அவை, டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் பெருங்கவலையைக் கொடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிவதாக அவர் கூறினார்.

தானியக்க வாகனங்கள் படிப்படியாகவே அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் உத்தரவாதம் தந்தார்.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் மறுபயிற்சிக்குச் செல்லவும் புதிய வேலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

அதே நேரம் புதிய தொழில்நுட்பங்கள் இடையூறாக இருக்கின்றன என்பதற்காகச் சிங்கப்பூர் அவற்றைத் தடுத்து நிறுத்தப்போவதில்லை என்று திரு வோங் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் அதிகச் சக்திவாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது; அதே நேரம் கணிக்கச் சிரமமாக உள்ள ஆபத்துகளுக்கு எதிராகப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டுப் பொதுவான விதிமுறைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் வகுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதன் தொடர்பில் நாடுகளையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, சிங்கப்பூர், தனது பங்கை ஆற்றும் என்று அவர் உறுதியளித்தார்.