📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 15, 2026 01:03 PM

யார் சீனியர் என்பதில் எழுந்த முன்விரோதம்: அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர் 20 பேர் கும்பலால் அடித்துக் கொலை

யார் சீனியர் என்பதில் எழுந்த முன்விரோதம்: அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர் 20 பேர் கும்பலால் அடித்துக் கொலை

சென்னை: திருவொற்றியூர் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர் ஒருவர், அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

வழக்கம் போல் பள்ளி முடிந்து, நண்பர்களுடன் வெளியே வந்த அவர், அருகேயுள்ள பஸ் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 20 பேர் கொண்ட ஒரு கும்பல் மாணவரை அடித்து இழுத்துச் சென்றது. பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து, அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

தாக்குதலில் நிலைகுலைந்த மாணவர், பேச்சு மூச்சின்றி கிடந்தார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:

பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒருவருக்கும், உயிரிழந்த மாணவரின் நண்பருக்கும் இடையே, பள்ளியில் 'யார் சீனியர்' என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர், தம்முடன் அதே பள்ளியில் படித்து தோல்வி அடைந்த முன்னாள் மாணவர்கள் 20 பேருடன் பிளஸ் 2 மாணவரை தாக்க திட்டமிட்டு அவருக்காக பள்ளியின் வெளியே காத்திருந்தார்.

ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர் அன்றைய தினம் பள்ளிக்கு வரவில்லை. அவரின் நெருங்கிய நண்பர் வெளியே வந்த போது, அவரை இழுத்துச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

தலைமறைவாக உள்ள பிளஸ் 1 மாணவர், அவருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.