📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 01, 2026 11:03 AM

யுவராஜ்

யுவராஜ்

யுவராஜ்-க்காக சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த சவுரவ் கங்குலி.. என்ன நடந்தது?

சென்னை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 1990-களின் இறுதி முதல் 2000-களின் தொடக்கம் வரை பல வீரர்கள் குறுகிய காலத்திற்குள் இந்திய அணிக்கு வந்து, அதன் பின்னர் முற்றிலும் காணாமல் போனார்கள். அதில் சில வீரர்கள் அசாத்திய திறமையால் உள்ளே நுழைந்து, சர்வதேச போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, எந்தத் தவறும் செய்யாமல் அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த சடகோபன் ரமேஷ். இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத 2001 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவரும் ஒரு முக்கிய பங்காற்றினார். ஆனால், இவரது டெஸ்ட் செயல்பாடுகள் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. தனது முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் 323 ரன்களைக் குவித்த சடகோபன் ரமேஷ், முதல் 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 53.83 என்ற அபாரமான சராசரியை வைத்திருந்தார். அப்போது தான் களம் இறங்கிய போட்டிகளில் 43, 5, 60, 96, 79 மற்றும் 40 என அடுத்தடுத்து ரன்களைக் குவித்து அசத்தினார். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் உள்நாட்டு போட்டிகளில் அதற்குமுன் தொடக்க வீரராக விளையாடி இருக்கவில்லை. மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டு அதில் வெற்றியும் கண்டார்.

இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷின் திறமையைக் கண்டறிந்து அவரைத் தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்தார். அவரது டெஸ்ட் அறிமுகம் முதலில் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கவிருந்தது. ஆனால், கார்கில் போர் பதற்றம் காரணமாக அங்கு மைதானத்தின் பிட்ச் சேதப்படுத்தப்பட்டதால், போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது. தனது முதல் போட்டியில் 43 மற்றும் 5 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 60 மற்றும் 96 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால், அந்தப் போட்டியில் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததால் ரமேஷின் ஆட்டம் வெளிச்சத்திற்கு வராமல் போனது. தொடர்ந்து ஈடன் கார்டன் டெஸ்டில் 79 மற்றும் 40 ரன்கள் குவித்தார். அவரது அபாரமான ஆட்டத்தைக் கண்டு வியந்த முகமது அசாருதீன், அவரை நேரில் கட்டிப்பிடித்து, "வசீம் அக்ரமின் பந்துவீச்சை ஒரு இளம் வீரர் இவ்வளவு நேர்த்தியாக எதிர்கொண்டு நான் பார்த்ததே இல்லை" என்று பாராட்டினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் 3 போட்டிகளில் 287 ரன்கள் குவித்து, 47 சராசரியுடன் 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடித்தார். அதன் பிறகு 2001 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சென்னையில் 61 ரன்கள் குவித்தார். கொல்கத்தா டெஸ்டிலும் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை தந்தார். இலங்கைக்கு எதிரான தொடரிலும் 223 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால், அதுதான் சடகோபன் ரமேஷ் விளையாடிய கடைசி டெஸ்ட் தொடர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2003-04 பார்டர்-கவாஸ்கர் தொடருக்கான டெஸ்ட் அணியில் சடகோபன் ரமேஷ் சேர்க்கப்பட்டார். ஆனால், அப்போதைய கேப்டன் கங்குலி அவருக்குப் பதிலாக வீரேந்தர் சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஜோடியை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார். விக்டோரியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 2-வது இன்னிங்ஸிலும் 40 ரன்கள் எடுத்த போதும் அவருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்த பயிற்சி போட்டியில் அவர் 8-வது வரிசைக்கு தள்ளப்பட்டார். இதற்கான காரணங்கள் எதுவும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்ததாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருந்த இந்திய அணியில், பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்ட சடகோபன் ரமேஷ் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக உள்நாட்டுப் போட்டிகளில் தீவிரமாக விளையாடிய அவர், தியோதர் டிராபியில் 97 மற்றும் 42 ரன்களும், துலீப் டிராபியில் 57 ரன்களும் எடுத்தார். ஆனால், கங்குலி மற்றும் பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோர் மாற்றுத் தொடக்க வீரராக யுவராஜ் சிங்கை தேர்வு செய்து ரமேஷிற்கு அதிர்ச்சியளித்தனர்.

ரமேஷின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை அதைவிட மோசமாக அமைந்தது. வெறும் 187 நாட்கள் மட்டுமே அவர் ஒருநாள் போட்டி வீரராக இருந்தார். மார்ச் 30, 1999 அன்று அறிமுகமாகி, அக்டோபர் 3, 1999 அன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 1999 உலகக் கோப்பையிலும் 5 போட்டிகளில் பங்கேற்று 144 ரன்கள் எடுத்திருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிராக 55 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோராகும். 1999-க்குப் பிறகு அவருக்கு ஒருநாள் அணியில் விளையாட வாய்ப்பே வழங்கப்படவில்லை. எந்தத் தவறும் செய்யாமல், திறமை இருந்தும் அரசியல் மற்றும் பிசிசிஐ எடுத்த முடிவுகளால் ஒரு சிறந்த இடதுகை தொடக்க வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது இந்திய கிரிக்கெட்டின் பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.