116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்
116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
தவறு செய்பவர்கள், தவெக உள்பட எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் உறுதியளித்துள்ளார்.
Published : September 3, 2026 at 7:28 PM IST
சென்னை: தவெக ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் நிகழ்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (செப்.03) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இன்று சட்டம்- ஒழுங்கு குறித்து பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள். மக்கள் பிரச்சனைகள் சார்ந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுக்கு டைவர்ஷனோ, பழிப்போடுகின்ற டாட்ரிக்ஸோ இல்லாமல் முதலமைச்சர் உரிய பதிலைக் கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையில் எனது பேச்சை நான் தொடங்குகின்றேன்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எழுப்புவதற்கு தான் சட்டமன்றத்திற்கு எங்களை எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். இந்த அரசு கொடுத்திருக்கக் கூடிய கொள்கை விளக்கக் குறிப்பு நேற்றிரவு 12.00 மணியளவில் என்னிடம் வந்துச் சேர்ந்தது. அதை நான் படித்துப் பார்த்தேன். திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்று அந்த கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் 293, 295, 296 ஆகிய பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதிய பாகுபாடு கொலைகள் குறைந்துள்ளது
குறிப்பாக, வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றங்கள் 2024- ஆம் ஆண்டைக் காட்டிலும், 2025- ஆம் ஆண்டில் பெருமளவில் குறைந்திருக்கிறது என்று 'Statics' உடன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை முயற்சி, கலவரங்கள், பாலியல் குற்றங்கள் அனைத்தும் குறைந்திருக்கிறது என்று 'Statics' கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் சாதிய பாகுபாடு கொலைகள் பெருமளவில் குறைந்திருக்கிறது என்று அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எங்களது திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக இருந்தது என்று காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து
இந்த அரசு அமைந்து சரியாக 116 நாட்கள் ஆகின்றது. இந்த 116 நாட்களில் இந்த அரசு புதிதாகக் கொண்டு வந்த திட்டங்களைவிட, ஏற்கனவே இருந்த எங்களுடைய அரசு கொண்டு வந்த திட்டங்களை ரத்துச் செய்திருக்கிறார்கள். இந்த அரசிடம் இருந்து பெயர் மாற்றம் அறிவிப்பு வருகிறது; அப்படி இல்லையென்றால் திட்டமே ரத்து என்ற அறிவிப்பு வருகின்றது. உதாரணத்திற்கு பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம், நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈசிஆர் மேம்பாலம், ஓசூர் டைடல் பார்க், ஓசூர் நாலெட்ஜ் பார்க், மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டம் போன்ற திட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
எங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடு 'TopGear'-ல் சென்றுக் கொண்டிருந்தது; ஆனால் இந்த 116 நாட்களில் தமிழ்நாடு 'Reverse Gear'-ல் சென்றுக் கொண்டிருக்கிறது. நான் முதலமைச்சரிடம் கேட்க விரும்புவது, திமுக அரசு தமிழ்நாட்டின் நலனுக்காகக் கொண்டு வந்த திட்டங்களை எதற்காக ரத்துச் செய்துள்ளீர்கள்? தேர்தல் வாக்குறுதியில் ஏராளமான திட்டங்களை கூறியிருந்தீர்கள். ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நிறைவேற்றி விடுவோம் என்று கூறியிருந்தீர்கள்.
விவசாயக் கடன் முழுத் தள்ளுபடி என்று சொல்லியிருந்தீர்கள்; ஆண்டிற்கு ஆறு இலவச சிலிண்டர்கள், எல்லாம் அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்று வாக்குறுதி அளித்திருந்தீர்கள். ஆனால், இவர்களின் அறிவிப்பு எப்படி இருக்கிறது? என்று பார்த்தோம் என்றால் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பல்வேறு 'Slab'கள் வைத்துள்ளீர்கள்.
'தாய்மாமன் காது குத்தும்' திட்டம் - உதயநிதி விமர்சனம்
மூன்று சிலிண்டர்கள் தான் வழங்கப்படும்; அதுவும் அடுத்த ஆண்டு தான் வழங்கப்படும் என்று கூறிவிட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை முழுமையாக செயல்படுத்தாமல் இப்படி பாதி பாதியாக நிறைவேற்றப் போவதாக அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் என்று சொன்னீர்கள். ஆனால் இந்த அரசின் அறிவிப்புகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் திட்டத்திற்கும் மொத்தமாகச் சேர்த்து 'தாய்மாமன் காது குத்தும்' திட்டம் என்று பெயர் வைத்துவிடலாம்.
இந்த அரசின் திட்டங்கள் மக்களை ரீச் ஆவதைவிட, இவர்கள் போடுகின்ற ரீல்ஸ் அனைத்தும் மக்களை அதிகமாக ரீச்சானால் போதும் என்ற வகையில் தான் இந்த அரசின் செயல்பாடு உள்ளது. இந்த நிலை எப்போது மாறும்? என்பதை முதலமைச்சர் தனது பதிலுரையில் சொல்ல வேண்டும். காவல்துறையைப் பொறுத்த வரைக்கும் அந்த துறையின் மேம்பாட்டிற்காக திமுக ஆட்சிக் காலத்தில் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்தபோது தான் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் காவல்துறையின் சீர்த்திருத்தத்திற்காக இதுவரை அமைக்கப்பட்ட ஐந்து காவல் ஆணையங்களில் நான்கு காவல் ஆணையங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. கடைசியாக, 2023- ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியில் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கொடுத்த இடைக்கால அறிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு செய்து காட்டினார்.
இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும்
ஐந்தாவது காவல் ஆணையம் 800 பரிந்துரைகளை அளித்திருந்தது. அதில் 86 பரிந்துரைகளை திமுக ஆட்சியில் படிப்படியாக நாங்கள் நிறைவேற்றிக் காட்டினோம். இந்த அரசை நான் கேட்டுக் கொள்வது மீதமுள்ள 'Long Term' பரிந்துரையை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன். இஸ்லாமிய சமுதாய தலைவர்களின் கோரிக்கையினை ஏற்று பல ஆண்டுகளாக சிறையில் வாடிய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கடந்த திமுக ஆட்சியில் பரோலும், நீண்டகால விடுப்பும் வழங்கியிருந்தோம். திமுக அரசு செய்ததுபோல் இந்த அரசும் நீண்ட நாளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்டகால விடுப்புக் கொடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று அரசு உடனே கொடுக்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு நிச்சயம் சிறப்பாக செயல்பட்டது. இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான போதைப்பொருட்களை திமுக ஆட்சியில் நாங்கள் பறிமுதல் செய்து இருக்கிறோம். முதன்முறையாக குற்றவாளிகளுடைய வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதிகப்படியான தண்டனைகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் அனைத்தும் எடுக்கப்பட்டது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் உடனுக்குடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனையை திமுக அரசு பெற்று தந்தது.
சட்டம் உள்ளது; ஒழுங்கு இல்லை
உதாரணமாக, வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? சட்டம் இருக்கிறது; ஆனால் ஒழுங்கு இல்லை. இதுவெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைமை தான் இது. 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இது மிகப்பெரிய 'Tragedy' ஆக மாறியுள்ளது. தினம் நியூஸ் பேப்பரைத் திறந்து பார்த்தால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள். தினமும் செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. கறிக்கடையில் கூட இந்த அளவிற்கு யாரும் வெட்ட மாட்டார்கள். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தினசரி வெட்டு, குத்து நடந்து கொண்டிருக்கிறது.
நகைக்காக கொலை, போதைப்பொருள் விற்பனையை அம்பலப்படுத்தினால் கொலை, மதுபோதையில் கொலை என கொலை நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் கோயம்புத்தூரில் மட்டும் ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலை நடந்து இருக்கிறது. அதில் ஒன்றுக்கு கூட முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. முன்பெல்லாம் ஆணவக்கொலைகள் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆட்சி அமைந்தவுடன் கௌரவக் கொலைகளாக மாற்றினார்கள். இப்போது அதெல்லாம் காதல் மரணங்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை இல்லை
கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளுக்கு அரசைக் குறைக்கூறி கட்சி, ஆட்சிக்கு வந்தபிறகு இப்போது என்ன சொல்கிறார்கள் தனிநபர் ஒழுக்கம் தான் காரணம் என்று மக்களுக்கு பாடம் எடுக்கின்றார்கள். ஆளுங்கட்சியினர் தினம், தினம் குற்றச் செயல்களில் ஈடுபடுவது இன்றைக்கு தொடர் கதையாகிவிட்டது. உதாரணத்திற்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு எம்எல்ஏ பெயரைக் கூறி ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஏற்கனவே, இந்த அவையில் பதிய வைத்திருக்கிறேன். அந்த பெண் புகார் கொடுத்தும் சம்மந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ மேல் இந்த அரசு இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என குற்றம்சாட்டினார்.
உதயநிதிக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், "கடந்த மே 31- ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அளித்த புகாரில் தவெக இளைஞரணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மே 03- ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடிக்கு அழைத்துச் சென்று அவரும், ஜெயபால் என்பவரும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு ஜூன் 01- ஆம் தேதி அன்று இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஜூன் 02- ஆம் தேதி அன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பாலசுப்பிரமணியன் நீக்கம் செய்யப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்ட ஜெயபால், தவெகவைச் சேர்ந்தவர் அல்ல. புலன்விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த அரசு, தவறு செய்பவர்கள் தவெக உள்பட எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.