13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு; தேர்தல் கமிஷன் விளக்கம்
புதுடில்லி: நாட்டில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம், 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம், பீஹார், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உட்பட, 20 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில், தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர்., மூலம், 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். முகவரியில் இல்லாதது, நிரந்தரமாக வேறு இடத்திற்கு குடியேறியது, உயிரிழந்தது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு போன்ற காரணங்களால், இவர்கள் நீக்கப்பட்டனர்.
எஸ்.ஐ.ஆர்., பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் காங்., - சமாஜ்வாதி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்கப்பட்ட, 13 கோடி பேரை பட்டியலில் மீண்டும் சேர்க்கக் கோரியும் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுதும் மூன்று கட்டங்களாக நடந்த எஸ்.ஐ.ஆர்., பணியில், 95.40 கோடி வாக்காளர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், உயிரிழந்தது, இடம் பெயர்ந்து போன்ற பல்வேறு காரணங்களால், 13.39 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
பல்வேறு மாநிலங்களில் உள்ள, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு நடத்தி இந்த பட்டியலை தயாரித்தனர். மேலும், இப்பட்டியல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 22 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பூத் வாரியாக வழங்கப்பட்டன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், ஆட்சேபனை அல்லது விடுபட்ட பெயர்களை சேர்க்க ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால கட்டத்தில் தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சேர்க்கவும், தகுதியற்ற பெயர்கள் மீது புகார் அளிக்கவும் முழு உரிமை இருந்தது. எஸ்.ஐ.ஆர்., பணியின் போது தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் கவனக்குறைவாக விடுபட்டிருந்தால், அவர்கள், 'படிவம் - 6' மூலம் பெயர்களை மீண்டும் சேர்க்கலாம். தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய அனைத்து சட்டப்பூர்வ வழிகளும் திறந்தே வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.