15 தளங்கள், 20 லட்சம் சதுர அடி: சென்னையில் அமையவிருக்கும் புதிய தலைமைச் செயலகத்திற்காக இடம் தேர்வு
15 தளங்கள், 20 லட்சம் சதுர அடி: சென்னையில் அமையவிருக்கும் புதிய தலைமைச் செயலகத்திற்காக இடம் தேர்வு
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கான இட இறுதி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் 25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குப் பட்டினப்பாக்கம் (போர்ஷோர் எஸ்டேட்) பகுதியில் உள்ள நிலத்திற்குத் தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளன. வருவாய்த் துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களையும் சேர்த்து மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.
சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 அடுக்குகளைக் கொண்ட நவீனக் கட்டடமாக இது உருவாக்கப்பட உள்ளது.
சதுர அடி ஒன்றுக்கு ரூ.22,000 மதிப்பீட்டில், மொத்தத் திட்டச் செலவு சுமார் ரூ.2,047 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கிண்டி மற்றும் நந்தம்பாக்கம் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், சாந்தோம் பிரதான சாலையை எளிதில் அணுகக்கூடிய வசதி கொண்ட பட்டினப்பாக்கம் பகுதியே இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'போர்ஷோர் எஸ்டேட்' என அழைக்கப்பட்ட இப்பகுதி, அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு 'பட்டினப்பாக்கம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கு 1960-களில் கட்டப்பட்டு சிதிலமடைந்த பழமையான அரசு ஊழியர் குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.