20 வயசுல கல்யாணமாகி இருந்தா குழந்தையே இருந்து இருக்கும்.. பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!
சென்னை: ரவிதேஜாவுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள 'இருமுடி' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருக்கும் நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி ஷங்கர் பேட்டி அளித்துள்ளார்.
பிரியா பாவனி ஷங்கர்: ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை, எனக்கு 20வயதில் கல்யாணம் ஆகி இருந்தால் குழந்தை இருந்து இருக்கும் அதனால், அம்மாவாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால், கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதை தான் யோசித்தேன். இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே மிகவும் இன்டென்ஸாகவும், ஆன்மாவைத் தொடும் வகையிலும் இருந்தது. இயக்குநர் ஸ்கிரிப்டை கொடுக்கும்போதே கதை எந்த திசையில் செல்லப் போகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. நான் பேப்பரில் படித்ததும், நான் கேட்டதும் தான் திரையில் அப்படியே வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது.
பெரிய ஹீரோக்களின் படம்: எல்லா படங்களில் கதையை கேட்கும் போது, நல்லப்படம் என்ற எண்ணத்துடனும், மிகுந்த நம்பிக்கையுடனும்தான் அந்த படத்தில் படிப்போம். படம் நன்றாக போகாது என்று யாராவது படத்தில் நடிப்பார்களா? ஆனால், அந்த பயணத்தில் நிறைய விஷயங்கள் மாறுவதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெரிய ஹீரோக்களுடன் பணிபுரியும்போது ஒரு கட்டத்தில் படத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு இருக்காது. சில நேரங்களில் இயக்குநருக்குக்கூட அந்தக் கட்டுப்பாடு இருக்காது.
அவருக்கு நன்றி: ஆனால் இந்தப் படத்தில் நாங்கள் கேட்ட கதையும், படித்த கதையும் தான் திரையில் வரப்போகிறது என்பது ஷூட்டிங் ஆரம்பித்த நான்கு, ஐந்து நாட்களிலேயே தெளிவாக தெரிந்தது. அதற்காக ரவி தேஜாவுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் அந்தக் கதாபாத்திரத்திற்காக தன்னையே முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார். அவருடன் இருந்த அனைவருமே அதே நம்பிக்கையுடன் பணியாற்றினார்கள். நாம் ஒரு நல்ல படைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஒரு தாயாக நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு நல்ல கதையில் ஒரு கதாபாத்திரமாக இருப்பதுதான் எனக்கு முக்கியம் என்று பிரியா பவானி ஷங்கர் தெரிவித்துள்ளார்.