📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 27, 2026 12:03 AM

தஞ்சாவூரில் காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கை ரத்து செய்ய இளைஞர் வேண்டுகோள்

தஞ்சாவூரில் காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கை ரத்து செய்ய இளைஞர் வேண்டுகோள்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எஸ்.ஐ ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் ஆகாஷ், எதிர்காலம் கருதிதன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தஞ்சாவூரில் கடந்த ஆக.17-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் எதிரே, விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நான் அந்த வழியாக அவசரமாக வீட்டுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் வந்தேன். மறியலால் வெகு நேரம் வெயிலில் நின்றேன். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழிவிடுமாறு கேட்டதற்கு மறுத்துவிட்டனர். அதில் ஒருவர் என் மீது பிசிஆர் கேஸ் கொடுத்துவிடுவேன் எனக் கூறினார்.

இதனால் நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் என்னை அவர்களிடமிருந்து அழைத்து வந்தனர். நான் வெயிலில் வெகு நேரம் நின்றதால், மன உளைச்சலில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது என்னையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு நான் போலீஸாரை தாக்கிவிட்டேன்.

இதனால் நான் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளேன். நான் அன்றைய தினம் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது. தவறு இருவர் மீதும் உள்ளது. போலீஸாரிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

ஒரு கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்த என்னை, இந்த சம்பவத்துக்கு பிறகு வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். இதனால் நான் பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, எதிர்காலம் கருதி என்மீதும், என்னுடன் கைது செய்யப்பட்ட அய்யப்பன் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.