200 மீட்டர் ஓட்டத்தில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற சாந்தி பெரேரா
நகோயா: சிங்கப்பூரின் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, 200 மீட்டர் பந்தயத்துக்கான தகுதிப் போட்டியில் முதலிடத்தில் வந்து அப்பிரிவின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சாந்தி பங்கேற்ற பிரிவின் இரண்டாம் தகுதிச் சுற்று குளிர் நிறைந்த இரவில் பலோமா மிசுஹு விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 30 வயதான சாந்தி போட்டியை 23.10 நொடிகளில் முடித்தார்.
அதே பந்தயத்தில் இரண்டாம் நிலையில் வந்த இந்தியாவின் ஹரிதா பத்ரா 23.31 நொடிகளும் மூன்றாம் நிலையில் பஹ்ரைனின் எடிடியோங் ஒடியோங் 23.56 நொடிகளும் எடுத்து ஓட்டத்தை முடித்தனர்.
அன்றைய தினம் நடந்த மொத்த தகுதிச் சுற்றுகளில் போட்டியிட்ட அனைவரையும் விட சாந்தி ஆக விரைவாக ஓடியுள்ளார்.
வெள்ளிக்கிழமை, சாந்தியை 100 மீட்டர் பந்தயத்தில் இரண்டாம் நிலைக்குத் தள்ளி தங்கம் வென்ற சீனாவின் சென் யூஜியே, 200 மீட்டருக்கான மூன்றாவது தகுதிச் சுற்றில் 23.29 நொடிகள் எடுத்து முதலிடத்தில் வந்தார்.
உள்ளூரில் புகழ்பெற்ற போட்டியாளரான ஜப்பானின் அபிகியெருஃபுக்கா அவரது தகுதிச் சுற்றை முடிக்க 23.30 நொடிகள் ஆனது. அவ்விருவரும் 200 மீட்டருக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் வியட்னாமின் திகம் துலே (23.38 நொடி), முதலிடத்திலும் தாய்லாந்தின் ஜீரபாத் கனொந்தா (23.58 நொடி) இரண்டாம் நிலையிலும் வந்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. கடந்த 2023ல் சீனாவில் நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தில் வந்து தங்கத்தை வென்ற சாந்தி அதனை தக்கவைத்துக்கொண்டு வரலாறு படைப்பார் என சிங்கப்பூரர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.