📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 06:31 PM

22

22

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஏற்கனவே, 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பலன் அடைகிறார்கள். 37,440 பள்ளிகள் மூலமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

* காலை உணவு திட்டம் விரிவாக்கம் மூலமாக மேலும் 15,450 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 34.64 லட்சம்

* புதிதாக 15 லட்சத்து 30 ஆயிரத்து 141 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலமாக 34 லட்சத்து 64 ஆயிரத்து 371 மாணவர்கள் காலை தோறும் உணவு பெறுவார்கள்.

* 22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 38 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.

* தமிழ்நாட்டை பொறுத்தவரை அன்றும் இன்றும் இருமொழிக் கொள்கைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துதான் தெரிவித்துள்ளார். தீர்ப்பு கிடையாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது. எந்த மொழிக்கும் எதிரானது தமிழ்நாடு அரசு அல்ல. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

உணவு மெனு தயாரிக்க கமிட்டி

* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு என்ற வகையில் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன வகையிலான உணவு என்ற மெனுவை தயாரிக்க புதிய கமிட்டியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாளில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.

* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.