$3 பில்லியன் கள்ளப்பண வழக்கு: ஏலத்துக்கு விடப்படும் சொகுசுக் கைப்பைகள், உயர்தர ஆபரணங்கள்
சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய S$3 பில்லியன் கள்ளப்பண வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட $2.9 மில்லியன் முதல் $3.9 மில்லியன் வரை மதிப்புடைய 600க்கும் மேற்பட்ட சொகுசுப் பொருள்களின் இணையவழி ஏலம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) காலை தொடங்கியது.
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, ‘ஹாட்லோட்ஸ்’ ஏல நிறுவனத்தின் இணையத்தளத்தில் மொத்தம் 624 பொருள்கள் பட்டியலிடப்பட்டன. இதில் 338 சொகுசுக் கைப்பைகள் மற்றும் பிற துணைப் பொருள்களும் 286 உயர்தர ஆபரணங்களும் அடங்கும்.
இவை சொகுசுக் கைப்பைகள் & துணைப் பொருள்கள் மற்றும் உயர்தர ஆபரணங்கள் - பகுதி 1 என இரு ஏலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஏலங்கள் முறையே செப்டம்பர் மாதம் 20, 27ஆகிய தேதிகளில் முடிவடைகின்றன.
ஏலத்தில் இடம்பெற்றுள்ள பொருள்களில், ‘லியி விட்டோன் x யாயோய் குசாமா’ சேர்ந்து உருவாக்கிய அரிய வகை ‘பம்ப்கின்’ கைப்பையும் ஒன்றாகும். ஆபரணங்களுக்கான ஏலத்தில் 15.02 கேரட் மஞ்சள் வைர மோதிரம் $180,000 என்ற மிக அதிகத் தொடக்க ஏலத் தொகையைக் கொண்டுள்ளது.
இறுதி ஏலத் தொகையுடன் 20 விழுக்காடு கொள்முதல் கட்டணத்தையும் ஹாட்லோட்ஸ் நிறுவனம் வசூலிக்கும். இதில் சிங்கப்பூரின் பொருள், சேவை வரியும் அடங்கும். வாங்குபவர் வெளிநாட்டவராக இருந்தால் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
ஏலத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு பொருளின் விற்பனை முடிவடையும் கடைசி ஐந்து நிமிடங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகை கோரப்பட்டால், அப்பொருளுக்கான ஏல நேரம் மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நீட்டிக்கப்படும். வேறெந்தத் தொகையும் கோரப்படாமல் முழுமையாக ஐந்து நிமிடங்கள் முடியும் வரை இந்நடவடிக்கை தொடரும். இதனால் ஏலம் முடிவடைவதற்குப் பல மணிநேரம் ஆகலாம் என ஏல நிறுவனம் விளக்கியுள்ளது.
செப்டம்பரில் தொடங்கி 2027 மே மாதம் வரை 15 தொடர் இணைய ஏலங்கள் நடத்தப்படவுள்ளன.